தமிழக முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ. மீது டெல்லியில் வழக்கு

தமிழக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை உள்பட 15 பேர் மீது டெல்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையதளங்களிலும், சமூக ஊடங்களிலும் உலவவிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் டெல்லி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சசிகலா புஷ்பா தில்லி மந்தர் மார்கில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

நானும் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை மார்பிங் மூலம் தயாரித்து, அவற்றை இணையதளங்கள், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் உள்நோக்கத்துடன் சிலர் வெளியிட்டனர்.

மக்கள் பிரதிநிதியான எனது நற்பெயருக்கும் தனி மனித ஒழுக்கத்துக்கும் களங்கம் கற்பிக்க நடந்த முயற்சி. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அவரது நன்மதிப்புடன் கட்சியில் வேகமாக வளர்ந்ததால் அதை சீர்குலைக்கும் நோக்குடன் இச்செயலில் ஈடுபட்டு எனது பெண்ணியத்துக்கு பங்கம் விளைவிக்க நடந்த முயற்சியாகும். இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
புகார் மனுவில் சொல்லியிருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய தில்லி போலீசார், சசிகலா புஷ்பாவை கடந்த வாரம் நேரில் அழைத்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது சசிகலா புஷ்பா அளித்த புகைப்பட ஆதாரங்கள், தொலைபேசி உரையாடல், சந்தேகிக்கப்படும் நபர்கள் பட்டியலை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் காவல் மேலிட உத்தரவின்படி தில்லி கணினிக் குற்றத்தடுப்புப் பிரிவு வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், தமிழக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, சசிகலா புஷ்பாவின் முன்னாள் உதவியாளர்கள் பாலமுருகன், சாத்தான்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆனந்த்ராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் சின்னதுரை, பிரியங்கா, காவ்யா, ஜெயராம், ராமு, கண்ணன் உள்பட 15 பேருக்கு எதிராக
எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விரைவில் கோகுல இந்திரா, இன்பதுரை, ஆனந்தராஜ், பாலமுருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தில்லி போலீஸ்கா உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

×Close
×Close