இந்தியாவில் நடந்த மோசமான மருத்துவமனை விபத்துகள்: ஒரு பார்வை!

இதற்கு முன்பு இந்தியா சந்தித்த மிகப்பெரிய மருத்துவமனை விபத்துகள் குறித்த ஒரு பார்வை

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் சுமார் 60 பேர் மூளை வீக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதையடுத்து 12-ம் தேதியன்று 11 குழந்தைகளும், 13-ம் தேதி ஒரு குழந்தையும் மூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்தன. இதனால், குழந்தைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 72-ஆக உயர்ந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிகப்பெரிய அளவிலான இந்த மருத்துவமனை விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இதற்கு முன்பும் இந்தியா சந்தித்த மிகப்பெரிய மருத்துவமனை விபத்துகள் குறித்த ஒரு பார்வை இதோ;

சத்தீஸ்கர் கருத்தரிப்பு பிரச்சார மையம்

கடந்த நவம்பர் 2014-ஆம் ஆண்டு சத்தீஸ்கரில், அம்மாநில அரசு சார்பில் கருத்தரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதில் சிகிச்சை பலனின்றி 11 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த கருத்தரிப்பு பிரச்சார மையத்தில், லாப்ராஸ்கோபிக் டியூபெக்டோமிஸ் சிகிச்சை செய்து கொண்ட 80 பெண்களில், 60 பெண்களுக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்த போது, “இந்த பிரச்சார மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்ட சில பெண்களின் உடலில் ஏற்பட்ட ரத்த அழுத்த அதிர்ச்சி காரணமாக ரத்தம் பாய்சனாக மாறிப் போனதால் 11 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்தார்கள். சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள பெந்தாரி என அழைக்கப்படும் பகுதியில் உள்ள அரசால் நடத்தப்படும் மருத்துவமனையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது.

புபனேஸ்வர் மருத்துவமனை தீ விபத்து

கடந்த 2011-ஆம் ஆண்டு, அக்டோபர் 18-ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் புபனேஸ்வரில் உள்ள ‘SUM’ என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகினர். 120 பேர் காயமடைந்தனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயால் ஏற்பட்ட கடுமையான புகை மூட்டம், அனைத்து வார்டுகளுக்கும் பரவியது. இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் 22 பேரும் பலியாகினர். இந்த தீவிபத்து ஏற்பட்ட போது, நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கொல்கத்தாவில் நடந்த கோரம்

கொல்கத்தாவில் உள்ள AMRI மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பொதுமக்கள் 89 பேரும், 4 மருத்துவமனை ஊழியர்களும் பலியாகினர். கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி, இந்த மருத்துவமனையின் தரைத் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, மொத்தம் 160 பேர் மருத்துவமனையினுள் இருந்தனர். இந்த மாபெரும் விபத்தை 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது. விசாரணை அறிக்கையில், “அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தாமல் அதனை மறைத்து மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டு வந்திருக்கிறது” என்று தெரிவித்தது.

போலீசார் தங்களது அறிக்கையில், “தீயணைக்கும் கருவிகள், எச்சரிக்கும் கருவிகள் போன்றவை அங்கிருந்தும் அவை வேலை செய்யவில்லை. அவரச வழி மற்றும் மேல் தளத்திற்கு எப்படி வர வேண்டும் என்ற சரியான தகவலைக் கூட மருத்துவமனை ஊழியர்களால் தெரிவிக்க முடியவில்லை. இதனால், மீட்புக் குழுவால் துரிதமாக செயல்படமுடியவில்லை. எனவே, நிலைமை மிகவும் மோசமாகி பலரையும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது” என கூறினர்.

ஏர்வாடி மனநல காப்பக விபத்து

பதினாறு வருடங்களுக்கு முன்பு, 2001-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி, ஏர்வாடியில் உள்ள மொய்தீன் பாதுஷா மனநல காப்பகத்தில் நடந்த தீ விபத்தில், சிகிச்சை பெற்று வந்த 28 நோயாளிகள், அங்கிருந்து தப்பிக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் இறந்த அனைவரும் இரும்பு சங்கிலியில் அங்கு கட்டப்பட்டிருந்ததால், தீ விபத்து ஏற்பட்டவுடன் அவர்களால் தப்பிக்க முடியாமல், அங்கேயே உடல்கருகி உயிரிழந்தனர். இந்த கோரமான விபத்தையடுத்து, ஏர்வாடி மனநல காப்பகம் இழுத்துமூடப்பட்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த ஐநூறுக்கும் மேற்பட்டோர் அரசு காப்பகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close