கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கிலும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் குற்றவாளி என அறிவித்து, ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆனார்.
அவருக்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. இந்த ஊழல் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியிலும் தொடர்ந்தது. அவர் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக மீண்டும் முதலமைச்சரான பின்பு கால்நடை தீவன ஊழல் குறித்து அவருக்கு எதிராக பூதாகரமாக எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.
இதையடுத்து, பாட்னா உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சர் ஆக்கினார்.
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.
வழக்கு விசாரணை பீகாரில் இருந்து தனியாக பிரிந்து சென்ற ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், லாலுவுக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து லாலு கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ராஞ்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
கால்நடை தீவன ஊழல் தொடர்பாக மேலும் 2 வழக்குகளில் லாலு தண்டிக்கப்பட்டுள்ளார். சைபாசா கருவூலத்தில் நடந்த ரூ.37.7 கோடி கையாடல் வழக்கில், லாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கில் லாலு ஜாமீன் பெற்றுள்ளார். சைபாசா கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி கையாடல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் லாலுவுக்கு கடந்த ஜனவரி 24-ம் தேதி 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதுதவிர லாலுவுக்கு எதிரான மேலும் 2 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. உடல் நலக்குறைவால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தும்கா கருவூலத்தில் மோசடி செய்து பணம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 19 பேரின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.