திருமணத்திற்கு மறுப்பு, 17 வயது இளம்பெண்ணை தீவைத்து கொளுத்திய இளைஞர்

கேரளாவில் வீட்டிலிருந்து வெளியேறி தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், இளைஞர் ஒருவர் 17 வயது இளம்பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கடமனிட்டாவை சேர்ந்த சஜில் (20) என்ற இளைஞரும், அதே[அகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்து வந்ததாகவும், சமீப காலமாக இருவருக்கும் பிரச்சனை இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை சஜில், அந்த பெண்ணை செல்ஃபோன் மூலம் தொடர்புகொண்டு, வீட்டிலிருந்து வெளியேறி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சஜில், இரவு 8 மணியளவில் அப்பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் யாருமில்லாத நிலையில் பெண் தனியாக இருந்தார். சஜில், வீட்டிற்குள் கட்டாயமாக நுழைந்து பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்திவிட்டு தப்பியோடினார்.

தீக்காயத்தால் பெண் அலறுவதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உடல்நிலை மோசமாகவே, அவர் கோட்டயத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தொடர்ந்து அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது, வெள்ளிக்கிழமை சஜில் அச்சிறுமியை தொடர்புகொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு அப்பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்து சஜில் இவ்வாறு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் உண்மை காரணம் என்ன என்பது தீவிர விசாரணைக்குப் பிறகே தெரியவரும் எனவும், அதுகுறித்து வாக்குமூலத்தில் கூறுவதற்கு அப்பெண் தயங்குவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால், அவரது வாக்குமூலத்தை தெளிவாக பதிவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தப்பித்து ஓடிய சஜிலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

×Close
×Close