விவசாயிகளின் ஆதரவோடு கெயில் திட்டம் நிறைவேறும்! - மத்திய அரசின் வேற லெவல் கான்ஃபிடன்ட்!

தமிழகத்தில் 30 மாதங்களில் விவசாயிகளின் ஒப்புதலோடு கெயில் திட்டம் நிறைவேற்றப்படும்

தமிழகத்தில் 30 மாதங்களில் விவசாயிகளின் ஒப்புதலோடு கெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கூட்டநாடு, மங்களூரு வழியாக பெங்களூருக்கு எரிவாயு கொண்டுசெல்லும் திட்டத்தை, இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக, தமிழகத்தில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக 925 கி.மீ தூரத்துக்கு எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்துக்காக விவசாய நிலங்கள் வழியாகக் குழாய்கள் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக, அந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை அளிக்கப்பட்டது. இருப்பினும், விவசாயிகளின் தொடர் எதிர்ப்பால் திட்டம் சரிவர செயல்படுத்தப்படாத நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் கெயில் திட்டம் குறித்து இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “கெயில் திட்டம் தொடர்பாக தமிழக அரசுடன் மத்திய பெட்ரோலியத்துறை தொடர்பில் தான் உள்ளது. சுமூகமான சூழ்நிலைக்காக கெயில் திட்டம் காத்திருக்கிறது. இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது தொடர்பாக, மக்களிடம் கெயில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழுவுடன் மத்திய அரசு 5 முறை ஆலோசனை நடத்தியுள்ளது. விவசாயிகள் ஒப்புதல் அளித்தால் 30 மாதங்களில் கெயில் திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படும். விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் ஒப்புதலோடு இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கெயில் குழாய்கள் பதிப்பதனால், நீண்ட வேர்களைக் கொண்ட தென்னை, மா, பலா, வாழை, கொய்யா போன்றவற்றை விளைவிக்கக் கூடாது; வெங்காயம், காய்கறிகள், கீரை வகைகள் போன்ற ஆழம் செல்லாத வேர்கள் கொண்ட பயிர்களையே சாகுபடி செய்ய வேண்டும்; எரிவாயு குழாய்கள் செல்லும் 20 மீட்டர் பாதையில் வீடுகள், கட்டிடம், மரம், ஆழ்குழாய் கிணறு, கிணறு போன்றவற்றை அமைக்கக் கூடாது; பாதையின் ஒரு பகுதியில் இருந்து குழாய் மூலமாக விவசாயத்திற்கு தண்ணீரை மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்ல மேற்கண்ட பாதையினைத் தாண்டியும் செல்லக்கூடாது” எனப் பல கட்டுப்பாடுகளை கெயில் நிறுவனம் விதித்தது.

இதனால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மிகக் கடுமையாக இந்தத் திட்டத்தை எதிர்த்தனர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவே, ‘இந்தத் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்’ என்றார்.

ஆனால் இன்று, ’30 மாதங்களில் கெயில் எரிவாயு குழாய்கள் தமிழகத்தில் பதிக்கப்படும் என்றும், அதுவும் விவசாயிகளின் ஒப்புதலோடு இந்த திட்டம் நிறைவேற்றப்படும்’ என மத்திய அமைச்சர் கூறியிருப்பது தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலா? அல்லது தமிழக விவசாயிகளிடம் விடுக்கப்பட்டுள்ள சவாலா? என்பது தெரியவில்லை.

இவ்விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close