நல்ல செய்தி: ராஜஸ்தானில் கான்ஸ்டபிளாகும் முதல் திருநங்கை

2 ஆண்டு கால நீதி போராட்டத்தின் மூலம் ராஜஸ்தான் மாநில முதல் மாற்றுப்பாலின காவல் அதிகாரி என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

ராஜஸ்தான் காவல் துறையில் முதன்முறையாக மாற்றுப்பாலினத்தவர் ஒருவர் காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தை சேர்ந்தவர் கங்கா குமாரி. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு காவலர் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், மாற்றுப்பாலினத்தவர் என்பதையும், இதுகுறித்த அறிவிப்புகள் சரிவர கூறப்பெறவில்லை எனக்கூறியும், அம்மாநில காவல் துறை அவரை காவலராக நியமிக்கவில்லை.

இதையடுத்து, கங்கா குமாரி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடுகிறார். இதன்பின், இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கங்கா குமாரியை இன்னும் 6 மாதங்களுக்குள் காவலராக நியமிக்க வேண்டும் என, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் மேத்தா உத்தரவு பிறப்பித்தார்.

இந்தியாவிலேயே காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாற்றுப்பாலினத்தவர் என்ற பெருமையை பெற்றிருக்க வேண்டிய கங்கா குமாரி, 2 ஆண்டு கால நீதி போராட்டத்தின் மூலம் ராஜஸ்தான் மாநில முதல் மாற்றுப்பாலின காவல் அதிகாரி என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த பிரித்திகா யாசினிதான், இந்தியாவின் முதல் மாற்றுப்பாலின எஸ்.ஐ என்ற பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close