மகளை 20 ஆண்டுகள் தனியறையில் அடைத்த பெற்றோர்

கோவாவில் மனநலம் சரியில்லை என தான் பெற்ற மகளையே சுமார் 20 வருடங்களாக வீட்டின் தனியறையில் பெற்றோர் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை காவல் துறையினர் செவ்வாய் கிழமை மீட்டனர்.

கோவாவில் உள்ள கண்டோலிம் எனும் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள வீட்டினுள் பல வருடங்களாக பெண் ஒருவர் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் வெளியே வருவதில்லை எனவும், அக்கம்பக்கத்தை சேர்ந்த ஒருவர் அங்குள்ள அரசு சாரா நிறுவனத்தை தொடர்புகொண்டு தெரியப்படுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து, என்.ஜி.ஓ.வை சேர்ந்தவர்கள் காவல் துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதன்பின், காவல் துறையினர் செவ்வாய் கிழமை அந்த இடத்திற்கு சென்று அப்பெண்ணை மீட்டனர். மீட்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 50 வயது இருக்கலாம்.

அந்த பெண்ணுக்கு என்ன பிரச்சனை, உண்மையிலேயே அவருடைய மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அப்பெண்ணுக்கு 20 வருடங்களுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், தன் கணவருடன் மும்பை சென்ற பிறகுதான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது அப்பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது.

இதனால், திருமணமான சிறிது காலத்திலேயே கணவனை பிரிந்து தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவ்வாறு வந்தபிறகு அப்பெண் இயல்புக்கு மாறாக நடந்துகொண்டதாக தெரிகிறது.

இதனால், அவருடைய பெற்றோர் அன்றிலிருந்து வீட்டில் தனியறையிலேயே அடைத்து வைத்துள்ளனர். ஒரு நாள் இல்லை, இரண்டு நாட்கள் இல்லை, கடந்த 20 வருடங்களாக அந்த அறையே பெண்ணுக்கு உலகமாகியிருக்கிறது.

ஆனால், இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைதாகவில்லை. விசாரணை முதல் கட்டத்திலேயே இருப்பதால் முழு விசாரணைக்குப் பின் அப்பெண்ணின் பெற்றோர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

20 வருடங்கள் தனியறையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவரது உடல் மற்றும் மனநலம் மோசமாகியுள்ளது. இதனால், அவர் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ளார்.

தன் கணவனுடனான பிரச்சனையால் வீடு திரும்பிய மகளை அன்புடன் அரவணைத்து தேற்றாமல் அவரை இப்படி 20 ஆண்டுகளாக தனியறையில் அடைத்துவைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியது மனித உரிமைகளுக்கு எதிரானது.

×Close
×Close