பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் சாமியார் ராதேமாவுக்கு காவல் நிலையத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் ராதேமா. இவர் குட்டைப்பாவடை அணிந்தபடி வெளியான காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவர் மீது காந்திவிலி காவல் நிலையத்தில் வரதட்சணை புகாரையும் அளித்துள்ளார். இப்படி, சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் ராதேமா மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கிழக்கு டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில், ராதேமாவுக்கு காவல் துறையினர் ஆடல், பாடலுடன் வரவேற்பு அளித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் வீடியோவை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டது.
மேலும், காவல் நிலையத்தின் தலைமை காவலர் சஞ்சய் ஷர்மா, ராதேமாவின் சிவப்பு நிற சால்வையை அணிந்துகொண்டு கைகூப்பியபடி நின்றிருக்க, அவரது நாற்காலியில் ராதேமா அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
ராம்லீலா நிகழ்ச்சிக்கு அவ்வழியாக சென்ற ராதேமா அந்த காவல் நிலையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், ராதேமா எதற்காக காவல் நிலையத்திற்கு சென்றார் என்பதில் குழப்பம் நிலவிவருகிறது. செல்லும் வழியில் காவல் நிலையத்தின் ஓய்வறையை பயன்படுத்த சென்றதாகவும் கூறப்படுகிறது.
வரதட்சணை வழக்கில் தனது பெயரை நீக்கக்கோரிய மனுவை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் நிராகரித்தது. இந்நிலையில், புதிதாக இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராதேமா.
காவல் நிலையத்தில் ராதேமாவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, 5-க்கும் மேற்பட்ட போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.