துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி : எதிர்கட்சிகள் அறிவிப்பு

காந்தி-ராஜாஜி பேரனை எதிர்கட்சிகள் வேட்பாளராக நிறுத்தியிருப்பதால், அதை ஈடு செய்யும் வகையில் வேட்பாளரை தேர்வு செய்யும் நெருக்கடி ஆளும் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி ஆகியோரின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியை இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. இவர் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர்!

இந்திய துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்கும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 18-ம் தேதி கடைசி நாள்!

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் ஆளும்கட்சியைவிட பின்தங்கிய எதிர்க்கட்சிகள், துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் முந்திக்கொள்ள முடிவெடுத்தன. அதன்படி ஜூலை 11-ம் தேதி இது தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியா தலைமையில் டெல்லியில் எதிர்கட்சிகள் கூடி விவாதித்தன.

முடிவில் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்கட்சிகளால் முன்பு பரிசீலிக்கப்பட்ட கோபாலகிருஷ்ண காந்தியை துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது என முடிவெடுத்தனர். இவர் தந்தை வழியில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் பேரன் ஆவார். தாய் வழியில் மூதறிஞர் ராஜாஜியின் பேரன்!

அண்ணல் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் பெயரும் துணை ஜனாதிபதி வேட்பாளராக எதிர்கட்சிகளால் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தலித் ஒருவரை வேட்பாளராக நிறுத்திய காரணத்தால், துணை ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் தலித் சமூகத்தை சேர்ந்தவரை முன்னிறுத்தும் முடிவுக்கு எதிர்கட்சிகள் வரவில்லை.

ஜனாதிபதி தேர்தலைப்போலவே காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதாதளம், தி.மு.க. உள்ளிட்ட 17 எதிர்கட்சிகளின் ஆதரவு கோபாலகிருஷ்ண காந்திக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆதரவை பா.ஜ.க. கைவசம் வைத்திருப்பதால், கோபாலகிருஷ்ண காந்தியால் தார்மீக போட்டியை மட்டுமே கொடுக்க முடியும்.

எதிர்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவருக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1968-ல் ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற இவர், 1985 வரை தமிழகத்தில்தான் பணிபுரிந்தார். பிறகு இப்போது எந்தப் பதவிக்கு போட்டியிடுகிறாரோ, அதே துணை ஜனாதிபதிக்கு செயலாளராக பணி மாற்றம் பெற்றார். ஜனாதிபதியின் இணைச் செயலாளராகவும் பணி புரிந்திருக்கிறார்.

2004 முதல் 2009 வரை மேற்கு வங்க கவர்னராக பணியாற்றினார் கோபாலகிருஷ்ண காந்தி. 2011-ல் சென்னையில் உள்ள பிரசித்திபெற்ற கலை நிறுவனமான கலாஷேத்திராவின் தலைவராக பொறுப்பேற்றார். அந்தப் பதவியில் 2014 வரை நீடித்தார். இவருக்கு தாரா காந்தி என்ற மனைவியும், இரு மகள்களும் உண்டு.
காந்தி-ராஜாஜி பேரனை எதிர்கட்சிகள் வேட்பாளராக நிறுத்தியிருப்பதால், அதை ஈடு செய்யும் வகையில் வேட்பாளரை தேர்வு செய்யும் நெருக்கடி ஆளும் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது.

×Close
×Close