சீனாவை திருப்திப்படுத்த கொள்கையை மாற்றவில்லை: வெளியுறவுத்துறை விளக்கம்

தலாய்லாமா குறித்த இந்தியாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை

ஆர் சந்திரன்

நீண்ட காலமாக கசப்புணர்வு நிறைந்ததாகத் தொடரும் சீனாவுடனான உறவுக்காக, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் புதிய மாற்றங்கள் செய்யப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, திபேத் நாட்டின் புத்தமதத் தலைவரான தலாய்லாமா குறித்த இந்தியாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

திபேத்தை, தமது நாட்டின் நிலப்பகுதி என சீனா கூறுகிறது. ஆனால், அதைத் தனி நாடு எனக் கூறும் தலாய்லாமா மீது 1959ம் ஆண்டே நடவடிக்கை எடுக்க முயன்றது. அப்போது இந்தியாவுக்கு தப்பி வந்த தலாய்லாமாவுக்கு இங்கே அரசியல் ரீதியாக அடைக்கலம் தரப்பட்டு, அவர் தரம்சாலாவில் தங்க அனுமதிக்கப்பட்டது. அன்றுமுதல் இந்திய அரசு தொடர்ந்து திபேத்தை தனி நாடாக அங்கீகரித்து இருப்பதுடன், அது தற்போது சீனாவின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக சொல்லும் தலாய் லாமாவின் கருத்துடன் இசைவாகவே நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில், தலாய் லாமா இந்தியா வந்து, தற்போது 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அவர் தங்கியுள்ள தர்மசாலா விழாக் கோலம் பூண்டு வருகிறது. பலதரப்பினரும் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கப்படும் நிலையில், இவ்விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில்தான் தலாய்லாமா குறித்த தனது கொள்கையை இந்தியா மாற்றிக் கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இதை மறுத்து வரும் இந்திய அரசு, தலாய் லாமா குறித்த தனது கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை எனவும், கடந்த காலங்களில் கையாண்ட கொள்கையே தொடர்ந்து கடைபிடிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close