Advertisment

சுழல் விளக்கு கலாச்சாரத்துக்கு முடிவு... நாட்டில் உள்ள அனைவருமே 'விஐபி-கள்' தான்... வெங்கையா நாயுடு விளக்கம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுழல் விளக்கு கலாச்சாரத்துக்கு முடிவு... நாட்டில் உள்ள அனைவருமே 'விஐபி-கள்' தான்... வெங்கையா நாயுடு விளக்கம்

டெல்லி: நாட்டில் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை குறைக்கும் விதத்தில் மத்திய அரசு செயல்படவில்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து மக்களுமே விஐபி-கள் தான் என்று தெரிவித்தார்.

Advertisment

நாட்டின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடும் படியாக குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர், ஆளுநர், மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர்களின் கார்களில் சிவப்பு நிற சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல, காவல்துறை டிஜிபி, அரசுத் துறை செயலாளர், மாவட்ட நீதிபதி, காவல்துறை கண்காணிப்பாளர், உள்ளிட்டவர்களின் கார்களில் நீல நிற சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மிக முக்கியஸ்தர்கள் என வெளிக்காட்டும் வகையில் இந்த சுழல் விளக்குகள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த நடைமுறைக்கு தற்போது முடிவுகட்டும் வகையில் மத்திய அரசு சுழல் விளக்குகள் பயன்படுத்துவது குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவசரகால வாகனங்களில்(ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம்) மட்டும் சுழல் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். மேலும், மற்ற முக்கியஸ்தர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சுழல் விளக்குகளை அகற்ற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, மே 1-முதல் இந்த வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், விதிமுறையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி மத்திய அரசு மற்றும் மாநில அரசின் முக்கிய பிரமுகர்களுக்கும் மே-1ந் தேதி முதல் சுழல் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை என வெங்கையா நாயுடு நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் நோக்கம் விஐபி-களுக்கான பாதுகாப்பை குறைப்பது இல்லை. முக்கியஸ்தர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறினார்.

முக்கியஸ்தர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சுழல் விளக்குகளை அகற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவு குறித்து தொடர்ந்து பேசிய அவர், "நாட்டில் உள்ள அனைவரும் விஐபி-கள் தான், இது தான் மத்திய அரசின் தத்துவம்" என்றார். இந்த முடிவானது சிறிய தொடக்கம் தான் என்றபோதிலும், நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சரிசமமாக நடத்தப்படுவார்கள். மத்திய அரசின் இந்த முடிவை மாநில அரசுகள் பின்பற்றும் என்று நம்பிக்கை இருப்பதாகவும், அவ்வாறு நடைமுறைப்படுத்த தவறும் பட்சத்தில் பொதுமக்களின் கடுங் கோபத்திற்கு அவர்கள் ஆளாக நேரிடும் என்று தெரிவித்தார்.

Tamil News Union Minister
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment