Advertisment

8 ஆண்டுகளில் 22 கோடி பேர் விண்ணப்பம்; 7.22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கிய மத்திய அரசு

2019-20 தவிர, 2014-15ல் இருந்து அரசுப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; 22 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 7.22 லட்சம் பேருக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கிய மத்திய அரசு

author-image
WebDesk
New Update
8 ஆண்டுகளில் 22 கோடி பேர் விண்ணப்பம்; 7.22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கிய மத்திய அரசு

Harikishan Sharma 

Advertisment

Govt job rush: in 8 years, 22 crore applied, only 7.22 lakh were selected: கடந்த எட்டு ஆண்டுகளாக அரசு வேலைகளுக்கான ஆர்வம் தடையின்றி தொடர்ந்தது, ஆனால் பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவான விண்ணப்பங்களே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. 2014-15 முதல் 2021-22 வரை பெறப்பட்ட 22.05 கோடி விண்ணப்பங்களில், 7.22 லட்சம் அல்லது 0.33 சதவீதம் மட்டுமே, வெவ்வேறு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு புதன்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.

எழுத்துப்பூர்வ பதிலில், பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், 2019-20, கொரோனா தொற்றுநோய் முழுவதுமாக பரவுவதற்கு முந்தைய ஆண்டில் அதிகபட்சமாக 1.47 லட்சம் பேர் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டதாக மக்களவையில் தெரிவித்தார். லோக்சபாவிற்கும் தேர்தல் நடந்த அதே ஆண்டான 2019-20ல் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, எட்டு ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த 7.22 லட்சத்தில் 20 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக இருந்தது.

இதையும் படியுங்கள்: பணமோசடி தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத் துறைக்கு முழு அதிகாரம்; உச்ச நீதிமன்றம் உறுதி

விதிவிலக்காக 2019-20 மட்டும் தவிர்த்துவிட்டால், 2014-15ல் இருந்து அரசுப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பரந்த போக்கு தெரிவிக்கிறது. 2014-15ல், 1.30 லட்சம் விண்ணப்பதாரர்கள் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர், ஆனால் அடுத்த ஆண்டுகளில் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தது - 2015-16ல் 1.11 லட்சம்; 2016-17ல் 1.01 லட்சம்; 2017-18ல் 76,147; 2018-19 இல் 38,100, 2020-21 இல் 78,555 மற்றும் 2021-22 இல் 38,850.

கடந்த எட்டு ஆண்டுகளில் 7.22 லட்சம் பேர் மட்டுமே பணி நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி, அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேரை "மிஷன் முறையில்" பணியமர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி "அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளங்களின் நிலையை ஆய்வு செய்த பின்னர்" பிரதமர் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

2014 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 22.05 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் ஜிதேந்திர சிங் அளித்த தகவல் தெரிவிக்கிறது. அதிகபட்ச விண்ணப்பங்கள் (5.09 கோடி) 2018-19 ஆம் ஆண்டில் பெறப்பட்டன, குறைந்த அளவு விண்ணப்பங்கள் 1.80 கோடி - 2020-21 இல் பெறப்பட்டுள்ளது.

தரவுகளின் பகுப்பாய்வு, எட்டு ஆண்டுகளில் பெறப்பட்ட ஆண்டு சராசரியான 2.75 கோடி விண்ணப்பங்களுக்கு எதிராக, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 90,288 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எட்டு ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் விகிதம் 0.07 சதவீதம் முதல் 0.80 சதவீதம் வரை இருந்தது.

தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான அனுமுலா ரேவந்த் ரெட்டியின் கேள்விக்கு தனது பதிலில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பல்வேறு முயற்சிகளை பட்டியலிட்ட ஜிதேந்திர சிங், “வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். அதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,” என்று கூறினார்.

“பட்ஜெட் 2021-22 உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டங்களை அறிமுகப்படுத்தியது, 2021-22 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் PLI திட்டங்கள் 60 லட்சம் புதிய வேலைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கின்றன... பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) சுய வேலைவாய்ப்பை எளிதாக்குவதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது. PMMY இன் கீழ், ரூ. 10 லட்சம் வரை பிணையில்லாத கடன்கள், குறு/சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளை அமைக்க அல்லது விரிவுபடுத்த உதவும் வகையில் நீட்டிக்கப்படுகின்றன,” என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

ஜிதேந்திர சிங் பட்டியலிட்ட மற்ற திட்டங்களில், தெருவோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்குவதற்கு பிணைய இலவச மூலதனக் கடனை எளிதாக்கும் வகையில், ஜூன் 1, 2020 அன்று தொடங்கப்பட்ட பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி, புதிய வேலைகளை உருவாக்குவதற்கும், கொரோனா தொற்றுநோய்களின் போது இழந்த வேலைகளை மீட்டெடுப்பதற்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க அக்டோபர் 1, 2020 அன்று தொடங்கப்பட்ட ஆத்மா நிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனா (ABRY) ஆகியவை அடங்கும். இந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி நிலவரப்படி, 59.54 லட்சம் ABRY பயனாளிகள் உள்ளனர், என்று கூறினார்.

இவை தவிர, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி மிஷன், புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், MGNREGS, பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா, தீன் தயாள் அந்தோதயா யோஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்றவை வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, என்றும் ஜிதேந்திர சிங் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment