Advertisment

குஜராத்தில் அசுர பலத்துடன் ஆட்சியை தொடரும் பா.ஜ.க; டிச.12ல் மீண்டும் முதல்வராகிறார் பூபேந்திர படேல்

குஜராத்தில் 182 சட்டபேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

author-image
WebDesk
New Update
குஜராத்தில் அசுர பலத்துடன் ஆட்சியை தொடரும் பா.ஜ.க; டிச.12ல் மீண்டும் முதல்வராகிறார் பூபேந்திர படேல்

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Advertisment

குஜராத்தில் இம்முறை பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. குஜராத்தில் 7-வது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. கருத்துக் கணிப்புகளில் படி பா.ஜ.க அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் மாநிலத்தின் அதன் வெற்றியை தக்க வைக்க முயற்சிக்கிறது. இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புகளில் படி ஆம் ஆத்மி கட்சி 9 முதல் 21 இடங்களைப் பெறும் என்று கூறியுள்ளது.



  • 16:26 (IST) 08 Dec 2022
    மோடி தலைமை மீது குஜராத் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

    குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் பா.ஜ.க மீது குஜராத் மக்கள் மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி” என்று கூறினார்.

    செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், “பாஜக 52 சதவீத வாக்குகளுடன் 157 இடங்களைப் பெற்று வலுவான கட்சியாக உருவெடுத்துள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகும் குஜராத் அரசுக்கு எதிராக அதிருப்தி இல்லை. அதேசமயம், காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. குஜராத்தில் அக்கட்சி முற்றிலும் அழிந்து விட்டது.” என்று கூறினார்.



  • 16:22 (IST) 08 Dec 2022
    குஜராத் ஆம் ஆத்மி-யின் முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி பாஜக-விடம் தோல்வி

    குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான இசுதான் காத்வி, குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கம்பாலியா தொகுதியில் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றார். நான்காவது சுற்றின் முடிவில் காங்கிரஸின் தற்போதைய எம்.எல்.ஏ விக்ரம் மேடம்-ஐ விட காத்வி முன்னிலை வகித்தார். பா.ஜ.க-வின் முலுபாய் பெரா மூன்றாவது இடத்தில் இருந்தார். ஆனால், இதையடுத்து வந்த சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையில் பெரா தனது போட்டியாளர்களை முறியடித்தார்.

    சௌராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள இத்தொகுதியில் ஆம் ஆத்மி தனது முதல்வர் முகமான காத்வியை நிறுத்தியதை அடுத்து, குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கம்பாலியா ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்தது.



  • 15:30 (IST) 08 Dec 2022
    குஜராத்தில் காங்கிரஸ் வாக்குகளைப் பிரிப்பதற்காக பா.ஜ.க ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி அளித்தது - சித்தராமையா விமர்சனம்

    குஜராத்தில் காங்கிரஸ் வாக்குகளைப் பிரிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க நிதியுதவி அளித்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜ.க தொடர்ந்து ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ள நிலையில், குஜராத் தேர்தலில், பா.ஜ.க பெரும் தொகையை அள்ளி வீசி செலவு செய்ததாக கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் சித்தராமையா கூறினார்.

    “குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அதிகம் செலவு செய்தது. காங்கிரஸ் வாக்குகளைப் பிரிக்க ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க நிதி அளித்தது. ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிட்டதால் நாங்கள் பின்தங்கினோம்” என்று சித்தராமையா இங்கு செய்தியாளர்களிடம் கூறினார். புதிய கட்சி 10 சதவீத வாக்குகளைப் பெற்று காங்கிரஸின் வாக்குப் பங்கைக் குறைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் பெரும் பணத்தை செலவிட்டுள்ளது. காங்கிரஸை விட அதிகமாக செலவு செய்தது. ஆனாலும், அவர்கள் 6 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறினார்.



  • 15:21 (IST) 08 Dec 2022
    பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலுக்கு குஜராத் மக்கள் வாக்களித்துள்ளார்கள்: அமித்ஷா

    குஜராத்தில் பா.ஜ.க சாதனை படைத்து வெற்றியின் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கட்சியின் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமரின் வளர்ச்சி அரசியலுக்கான குஜராத மாநிலம் வெற்றியை அளித்துள்ளது என்று கூறினார்.

    “பொய்யான வாக்குறுதிகள், களியாட்டங்கள், திருப்திப்படுத்துதல் போன்ற அரசியல் செய்பவர்களை நிராகரித்து வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கான தலைவராக விளங்கும் நரேந்திரமோடியின் பா.ஜ.க-வுக்கு குஜராத் வரலாறு காணாத வெற்றியை வழங்கியுள்ளது. பெண்கள், இளைஞர்கள் அல்லது விவசாயிகள் என அனைத்து பிரிவினரும் முழு மனதுடன் பா.ஜ.க-வுடன் இருக்கிறார்கள் என்பதை இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    மேலும், “குஜராத் எப்போதும் வரலாற்றை உருவாக்கும் பணியை செய்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மோடியின் தலைமையில், குஜராத்தில் வளர்ச்சியின் அனைத்து சாதனைகளையும் பா.ஜ.க முறியடித்தது. இன்று குஜராத் மக்கள் பா.ஜ.க-வை ஆசீர்வதித்து வெற்றியின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளனர். இது நரேந்திரமோடியின் வளர்ச்சி மாடலில் பொதுமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றியாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 15:14 (IST) 08 Dec 2022
    பா.ஜ.க-வின் நல்லாட்சி மீது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி - குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்

    பா.ஜ.க-வின் நல்லாட்சி மீது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் எண்கள் தெரிவித்ததையடுத்து, முதல்வர் பூபேந்திர படேல் குஜராத்தி மொழியில் டுவிட்டரில், “இது பாஜகவின் நல்லாட்சி மீது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றி” என்று கூறியுள்ளார்.



  • 15:08 (IST) 08 Dec 2022
    போர்பந்தர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா வெற்றி

    முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், குஜராத் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான அர்ஜுன் மோத்வாடியா போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூத்த காங்கிரஸ் தலைவரான இவர், 2012 மற்றும் 2017ல், பா.ஜ.வின் பாபு போக்ரியாவிடம் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில், மோத்வாடியா 8,181 ஓட்டுகள் வித்தியாசத்தில், போக்ரியாவை தோற்கடித்தார்.



  • 14:48 (IST) 08 Dec 2022
    குஜராத் தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மிக்கு 'ஏமாற்றம்'; தேசிய கட்சி அந்தஸ்தை கொண்டாடும் தொண்டர்கள்

    குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி அந்தஸ்து பெற உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் கிடைக்காததால், அக்கட்சி ஏமாற்றம் அடைந்துள்ளது.

    “கடந்த 8 மாதங்களாக குஜராத் மாநிலத்தில் எங்களின் செயல்பாடு இருந்ததால் 40-50 இடங்களை எதிர்பார்த்து நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். 5-10 இடங்களைப் பெறுவது நிச்சயமாக நாங்கள் எதிர்பார்த்தது அல்ல” என்று குஜாராத் மாநில ஆம் ஆத்மி கட்சியின் வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவர் டிகே திவாரி கூறினார்.

    இதற்கு திவாரி இரண்டு காரணங்களை கூறுகிறார்: “முதலாவதாக, பலர் வாக்களிக்க வெளியே வருவதில்லை. குறிப்பாக 20-40 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள். இது ஒரு பெரிய பின்னடைவு. இரண்டாவதாக, வாக்களிக்கும் மக்களில், 75 சதவீதம் பேர், கடைசி நேரத்தில் கையாளப்பட்ட சமூகத்தின் அந்த அடுக்குகளைச் சேர்ந்தவர்கள்.

    புதிய கட்சி என்பதால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை என்றும் அவர் நியாயப்படுத்தினார். “இருப்பினும், எங்கள் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட அனைத்து இடங்களிலும் நாங்கள் வாக்குகளைப் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எங்களின் வாக்கு சதவீதம் 15-20 சதவீதம் என்பது பாராட்டத்தக்கது. மிக முக்கியமாக, நாங்கள் இப்போது ஒரு தேசியக் கட்சியாக இருக்கிறோம்” என்று திவாரி கூறினார், 2024 மக்களவைத் தேர்தலில் கட்சியின் இலக்கை வலியுறுத்தினார்.



  • 14:13 (IST) 08 Dec 2022
    குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை பிடித்தது பாஜக; மீண்டும் முதல்வராகிறார் பூபேந்திர படேல்

    குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது. பூபேந்திர படேல் குஜராத் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார். டிசம்பர் 12-ம் தேதி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் என்று குஜராத் மாநில பாஜக தலைமை அறிவித்துள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.



  • 14:00 (IST) 08 Dec 2022
    பூபேந்திர படேல் டிசம்பர் 12ஆம் தேதி பதவியேற்கிறார்

    செய்தியாளர்களிடம் பேசிய பாஜக குஜராத் தலைவர் சிஆர் பாட்டீல், காந்திநகரில் டிசம்பர் 12ஆம் தேதி மாநிலத்தின் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பார் என்றார்.



  • 13:58 (IST) 08 Dec 2022
    பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்கிறார்

    செய்தியாளர்களிடம் பேசிய பாஜக குஜராத் தலைவர் சிஆர் பாட்டீல், காந்திநகரில் டிசம்பர் 12ஆம் தேதி மாநிலத்தின் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பார் என்றார்.



  • 13:50 (IST) 08 Dec 2022
    பாஜகவின் வரலாற்று வெற்றிக்கு பிரதமர் மோடியின் தொலைநோக்கு காரணம்: சி ஆர் பாட்டீல்

    வெற்றியை தொடர்ந்து, பாஜக குஜராத் தலைவர் சிஆர் பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் கிடைத்த வெற்றி இது. மாநிலத்தின் வளர்ச்சிக்கான பிரதமரின் பார்வையை நிறைவேற்ற இரவு பகலாக உழைப்போம் என்று உறுதியளிக்கிறேன். குஜராத் மக்களை முட்டாளாக்கும் வகையில் ஆதாரமற்ற வாக்குறுதிகள் மற்றும் அறிக்கைகளை வழங்கிய எதிர்க்கட்சிகளின் வார்த்தைகளை நம்பாத மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.



  • 13:44 (IST) 08 Dec 2022
    பாஜக செய்த பணிக்கு கிடைத்த வெற்றி: ஹர்திக் படேல்

    விரும்காம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஹர்திக் படேல் கூறியதாவது: 370வது பிரிவை நீக்கியது உட்பட பாஜக செய்த பணிகளுக்கு கிடைத்த வெற்றி இது. அடுத்து செய்ய வேண்டிய பணிகளில் கவனம் செலுத்துவோம். 20 வருடங்கள். ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு எந்த போட்டியையும் அளிக்கவில்லை என்றார்.



  • 13:41 (IST) 08 Dec 2022
    அன்க்லாவ் தொகுதி நிலவரம்

    அன்க்லாவ் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. அமித் சாவ்தா, பாஜகவின் குலாப்சிங் பதியாரை எதிர்த்து 399 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலை பெற்றார்.



  • 13:40 (IST) 08 Dec 2022
    ஆனந்த் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவை பாஜக வீழ்த்தியது

    வதோதராவில் உள்ள சயாஜிகஞ்ச் தொகுதியில் பாஜகவின் கேயுர் ரொகாடியாவிடம் காங்கிரஸ் தலைவர் அமி ராவத் தோல்வியை தழுவினார். நகர மேயராக உள்ள ரொகாடியா 70,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    பாஜகவின் யோகேஷ் படேல் (பாப்ஜி) ஆனந்த் சட்டமன்றத் தொகுதியில் 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார், காங்கிரஸின் சிட்டிங் எம்எல்ஏ காந்தி சோதா பர்மர் பின்தங்கியுள்ளார்.



  • 12:49 (IST) 08 Dec 2022
    காங்கிரஸின் கோட்டையான வான்கனேரில் பாஜக முன்னிலை

    மோர்பி மாவட்டத்தின் மூன்றாவது சட்டமன்றத் தொகுதியான வான்கனேர், பாரம்பரிய காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது, இங்கு பாஜகவின் ஜிது சோமானி, 9-வது சுற்றில் வாக்கு எண்ணிக்கை முடிவில் 4,931 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ மஹ்மத்ஜாவித் பிர்சாதாவை விட முன்னிலை வகித்தார். சோமானி 38,534 வாக்குகளும், பிர்சாடா 33,603 வாக்குகளும் பெற்றனர். இன்னும் 13 சுற்றுகளின் எண்ணிக்கை மீதம் உள்ளது.



  • 12:47 (IST) 08 Dec 2022
    குஜராத் மக்கள் எடுத்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது

    பாஜக ஆட்சியை மீண்டும் கொண்டு வர குஜராத் மக்கள் எடுத்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. எவ்வாறாயினும், எங்கள் தரப்பில் எந்த குறைபாடும் இல்லை என்பதை முடிவுகள் காட்டுகின்றன,. இறுதியில் ஜனநாயகத்தில் மக்களின் வாக்குகள்தான் முக்கியம் என்று அகமதாபாத்தில் உள்ள மாநில தலைமையகத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜகதீஷ் தாக்கூர் கூறினார்.



  • 12:10 (IST) 08 Dec 2022
    சாதனை வெற்றியை நோக்கி பாஜக

    தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, பாஜக 154 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.



  • 12:04 (IST) 08 Dec 2022
    பத்ரா மக்களுக்காக உழைத்து கடனை அடைப்பேன்: பாஜகவின் சைதன்யசிங் ஜாலா

    பத்ரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவின் சைதன்யசிங் ஜாலா கூறும்போது, ​​“என் மீதும் பாஜக மீதும் நம்பிக்கை வைத்துள்ள பத்ரா மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடனை அடைக்க மக்களுக்காக பாடுபடுவேன்... வலுவான கிளர்ச்சித் தலைவரை எதிர்கொண்டாலும் பாஜகவின் அமைப்பு பலத்தால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது பாஜகவின் வெற்றி” என்றார்.



  • 12:02 (IST) 08 Dec 2022
    சூடுபிடித்த கம்பாட் தொகுதி

    காங்கிரஸ் கட்சியின் சிராக் படேல், தற்போதைய பாஜக எம்எல்ஏ மகேஷ் ராவல் விட 1,106 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதால், காம்பத் தொகுதி வாக்கு எண்ணிக்கை சூடுபிடித்துள்ளது.



  • 11:59 (IST) 08 Dec 2022
    பத்ரா தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவை தோற்கடித்த பாஜக

    பத்ரா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் கடைசிச் சுற்றில் பாஜகவின் சைதன்யசிங் ஜாலா 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ ஜஷ்பால்சிங் பதியாரை (தாக்கூர்) தோற்கடித்தார். பாஜகவின் கிளர்ச்சித் தலைவர் தினேஷ் படேல் மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளார்.



  • 11:56 (IST) 08 Dec 2022
    காங்கிரஸுக்கு பின்னடைவு

    ஆனந்த் மாவட்டத்தின் பெட்லாட் தொகுதியில் 16 சுற்று முடிவில் பாஜகவின் கமலேஷ் படேல் 17,739 வாக்குகள் முன்னிலை பெற்றதால் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.



  • 11:20 (IST) 08 Dec 2022
    நந்தோட் தொகுதியில் பாஜக முன்னிலை

    8வது சுற்று முடிவில், குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தின் நந்தோட் (ST) தொகுதியில் பாஜகவின் தர்ஷனா தேஷ்முக் 17,493 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.



  • 11:08 (IST) 08 Dec 2022
    காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு

    குஜராத் தேர்தல் முடிவு 2022: தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, பாஜக 150 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.



  • 10:12 (IST) 08 Dec 2022
    வாகோடியா: 2 பாஜக வேட்பாளர்களிடையே போட்டி

    2-வது சுற்று முடிவில், வதோதராவின் வகோடியா சட்டமன்றத் தொகுதியில் பாஜகயைச் சேர்ந்த வேட்பாளர் மற்றும் அதிருப்தி வேட்பாளரிடையே கடும் போட்டி உள்ளது. பாஜகவின் அஷ்வின் படேல் 6,882 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார். அதிருப்தி வேட்பாளர் தர்மேந்திரசிங் வகேலா 9,193 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.



  • 09:57 (IST) 08 Dec 2022
    ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் முன்னிலை

    கம்பாலியாவில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி முன்னிலையில் உள்ளார். பாஜக போட்டியாளரை விட 3,215 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.



  • 09:27 (IST) 08 Dec 2022
    என்க்லாவ், சங்கேடா தொகுதிகளில் பாஜக முன்னிலை

    ஆனந்த் மாவட்டத்தில் உள்ள என்க்லாவ்வில் காங்கிரஸ் வேட்பாளர் அமித் சாவ்தா 2,897 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

    முதல் சுற்று முடிவில் பாஜகவின் குலாப்சிங் பதியார் 4,635 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

    சோட்டா உதேபூர் மாவட்டத்தில் உள்ள சங்கேடா (எஸ்.டி) சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏ அபேசின் தத்வி 613 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment