Advertisment

வாக்களிக்காத ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி.. குஜராத் நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம்

குஜராத்தில் தேர்தலில் வாக்களிக்காத ஊழியர்களை அடையாளம் காண 1,000க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

author-image
sangavi ramasamy
New Update
வாக்களிக்காத ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி.. குஜராத் நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம்

குஜராத்தில் முதன்முறையாக 1,000க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் தொழில்துறை நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்துடன் (EC) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதில் நிறுவன ஊழியர்களின் தேர்தல் பங்கேற்பை கண்காணித்து, வாக்களிக்காதவர்களின் பெயர்களை தங்கள் வலைத்தளங்கள் அல்லது அலுவலக அறிவிப்பு பலகைகளில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி (CEO)பாரதி , தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை அமல்படுத்த உதவும் 233 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. குஜராத்தில் முதன்முறையாக 1,017 தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் தேர்தல் பங்கேற்பை நாங்கள் கண்காணிப்போம்.

இதற்காக நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்று கூறினார்.

கடந்த ஜூன் மாதம், மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், வாக்குப்பதிவு நாளில் விடுப்பு பெற்றும் வாக்களிக்காத ஊழியர்களைக் கண்டறிய அதிகாரிகளை நியமிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

பாரதி கூறுகையில், "குஜராத்தில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களை கண்காணிக்க முடிவு செய்துள்ளோம். இந்த நிறுவனகளில் உள்ள மனித வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் தங்கள் நிறுவனத்தில் வாக்களிக்காத ஊழியர்களின் பட்டியலை தயாரித்து, அதை அவர்கள் இணையதளத்திலோ அல்லது அறிவிப்பு பலகைகளிலோ வெளியிடுவார்கள்.

இதேபோல், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறை சேர்ந்த ஊழியர்களும் கண்காணிக்கப்படுவார்கள்" என்றார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், "2019 பொதுத் தேர்தலின் போது குஜராத்தில் 7 மாவட்டங்களில் குறைந்த அளவில் வாக்குப்பதிவு பதிவானது. அதில் 4 பெருநகரங்கள் ஆகும். நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறையும்போது, ஒட்டுமொத்த மாநில வாக்கு சதவீதமும் குறைக்கிறது. சமகாலப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதில் உள்ள உற்சாகம் சமூக ஊடகங்களில் மட்டும் நின்றுவிடாமல், வாக்களிப்பதன் மூலமும் வெளிப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு நாளில் நிறுவனங்களில் ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் ஊழியர்கள் வாக்களிக்க முன்வருவதில்லை. நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதமும் குறைக்கிறது. அதனால் தற்போது இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். வாக்களிக்காதவர்களை வாக்களிக்க ஊக்குவிக்கிறோம்.

கட்டாய வாக்களிப்பை அமல்படுத்த முடியாது. ஆனால் விடுமுறை அளிக்கப்பட்டும் வாக்களிக்காத பெரிய தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களை அடையாளம் காண விரும்புகிறது. இது கட்டாய வாக்களிப்பு நடவடிக்கையா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, கட்டாய வாக்களிப்பு இல்லை, வாக்களிக்காதவர்களை அடையாளம் காணும் முயற்சி" என்று கூறினார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 135B இன் படி எந்தவொரு வணிக, வர்த்தக நிறுவனம், தொழில்துறை நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருந்தால், தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். தகுந்த சட்டத்தின் கீழ் மாநில மற்றும் மத்திய அரசுகள் வாக்குப்பதிவு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

சில தொழிற்சாலைகள் தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை என்று பாரதி குற்றஞ்சாட்டினார்.

குஜராத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலில் 69 சதவீத வாக்குகளும், 2019 மக்களவைத் தேர்தலில் 64 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. 2017-ம் ஆண்டு தேர்தலில் குறைந்த வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இந்தநிலையில், குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறுகையில்,

"தொழிற்சாலைகள்- தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. ஊழியர்களை வாக்களிக்க ஊக்குவிப்பது ஒரு நல்ல நடவடிக்கை. அதேசமயம் தேர்தல் ஆணையம் தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல்,

வாக்களிக்காத நிறுவன உரிமையாளர்களின் பெயர்களையும் ஆணையம் வெளியிடுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment