குஜராத் மாநிலங்களவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை துவங்குவதில் தாமதம்

குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு செவ்வாய் கிழமை காலை ஒன்பது மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு செவ்வாய் கிழமை காலை ஒன்பது மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், பாஜக சார்பாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பாக, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் போட்டியிடுகின்றார்.

அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களே மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கின்றனர். 182 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில், பாஜகவிற்கு 120 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிளை அக்கட்சி எளிதில் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் இருந்த 57 சட்டமன்ற உறுப்பினர்களில், 6 உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகியதால், 51 உறுப்பினர்களே தற்போது உள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வெற்றிபெற ஒரு போட்டியாளர் 45 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும்.

இரவு 8:42 : தேர்தல் ஆணைய அலுவலக நுழைவுப் பகுதி ஏக பரபரப்பாக காட்சி தருகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் சிறு குழுக்களாக உள்ளே செல்வதும் வெளியே வந்து நிருபர்களை சந்திப்பதுமாக இருக்கிறார்கள். பா.ஜ.க. குழுவின் தலைவரான மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து, 3 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையை வெளியிட்டார்.

இரவு 8:22 : காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும், ஆனந்தசர்மா குறிப்பிட்ட அதே கருத்தை வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் தனது முந்தையை முன்மாதிரி நடவடிக்கையை பின்பற்றவேண்டும் என்றார் சிதம்பரம்.

இரவு 8:00 : காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. ஆனந்த் சர்மா தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே அளித்த பேட்டியில், ‘ஹரியானாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் எங்கள் எம்.எல்.ஏ. ஒருவர் கவனக்குறைவாக தனது வாக்கை வெளியே காட்டினார். அந்த வாக்கை செல்லாத வாக்காக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே அளவுகோலை குஜராத்திலும் பயன்படுத்த வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

இரவு 7.45: காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெறும் நம்பிக்கை இருப்பதாகவும் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கவேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.

மாலை 7:30: காங்கிரஸ் கட்சி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. காலையில் அவர்கள் எந்த புகாரும் கூற வில்லை. தாங்கள் தோற்றுப் போவதை உணர்ந்ததும், இது போன்ற குற்றச் சாட்டுகளை அவர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் அளித்துள்ள புகார் மனுவை தள்ளுபடி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளோம்: தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்துக்கு பின்னர் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மாலை 6:34: போலாபாய் கோஹில் மற்றும் ராகவ்ஜிபாய் படேல் ஆகிய காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்களது வாக்குச் சீட்டுகளை சட்டத்துக்கு புறம்பாக காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர் அல்லாத நபர்களிடம் காட்டியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

 

மாலை 6:15: அனைத்து அறிக்கைகளும், காங்கிரஸ் கட்சியின் புகார்களும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் வந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

மாலை 5:28: காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் தேர்தலில் மாற்றி வாக்களித்ததாக, அக்கட்சி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருப்பதால், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாலை 5:00: வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் துவங்க உள்ளது, அதனால், அமித் ஷா வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சக்தி சிங் கோஹில், இரண்டு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை அமித் ஷாவிடம் காண்பித்ததாக வீடியோ ஆதாரம் உள்ளது என குற்றம்சாட்டினார். “இரண்டு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை அமித் ஷாவிடம் காண்பித்ததற்கு ஆதாரம் உள்ளது. அதனால், அவருடைய வாக்கு நிராகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, உண்மை நிரூபிக்கப்படாவிட்டால் நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.”, என அவர் கூறினார்.

மாலை 4:30: “அகமது படேல் 45 வாக்குகளைவிட அதிகமாக பெற்று வெற்றி பெறுவார். ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.”, என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அர்ஜூன் மோத்வாதியா கூறினார்.

மதியம் 2:40: படேல் சமூகத்தின் நன்மைக்காக தான் வாக்களித்திருப்பதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நலின் கொட்டாடியா செய்தியாளர்களிடம் கூறினார்.

மதியம் 2:30: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆகியோர் சட்டப்பேரவைக்கு வெளியே.

மதியம் 2:15: 176 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களித்திருப்பதாக மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மதியம் 2:00: குஜராத் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும்.

மதியம் 1:52: ”ஒரு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் மாற்றி வாக்களித்ததால், என்னுடைய வெற்றி பாதிக்காது. நான் வெற்றிபெறுவேன்.”, என காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் செய்தியாளர்களிடம் கூறினார். ஐக்கிய ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் தனக்கே வாக்களித்திருப்பதாகவும் அவர் உறுதிபட கூறினார். ஏற்கனவே அவர் போட்டியிட்ட மூன்று லோக்சபா மற்றும் ஐந்து ராஜ்யசபா தேர்தல்களில், இம்முறை நடைபெறும் தேர்தலே கடினமானது என அகமது படேல் தெரிவித்தார்.

மதியம் 1:30: வாக்களித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் உமா பவன் உணவகத்தில் உணவு அருந்தினர்.

மதியம் 1:15: காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தர்ஷி கான்பூராவுக்காக வேறொருவர் வாக்களித்தது நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரே வாக்களிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தன்னால் எழுத முடியாது என தர்ஷி கான்பூரா தெரிவித்துள்ளார்.

மதியம் 1:00: காங்கிரஸ் கட்சி அளித்த தகவலின்படி, அக்கட்சி வேட்பாளர் அகமது படேலுக்கு 43 காங்கிரஸ் கட்சி வாக்குகள், ஒரு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வாக்கு, ஒரு ஐக்கிய ஜனதா கட்சி வாக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இது இறுதியான முடிவுகள் அல்ல. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பிறகே இறுதி முடிவு தெரியவரும்.

மதியம் 12:30: மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே மாஜக கடுமையாக உழைத்து வருவதாக குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் ஆனந்தி பென் படேல் கூறினார். மூன்று மாநிலங்களவை இடங்களையும் பாஜக கைப்பற்றும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மதியம் 12:15: 61 பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் 43 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தற்போது வரை வாக்களித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை.

மதியம் 12:00: மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா, சில பாஜக உறுப்பினர்கள் தவறான வாக்குகளை செலுத்தியதாக குற்றம்சாட்டினார்.

காலை 11:55: பெங்களூரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட 44 சாங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தபின், அவர்கள் வந்த பேருந்திலேயே திரும்பிச் சென்றனர்.

காலை 11:40: ஐக்கிய ஜனதா தளத்தை சேந்த ஒரேயொரு சட்டப்பேரவை உறுப்பினர் சோட்டு வாசவா இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு கூறியதாவது, “நான் நமது நாட்டின் பாதுகாப்பிற்காக வாக்களித்தேன். பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., தாழத்தப்பட்ட, பழங்குடியின மக்கள், தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோரைக் கருத்தில்கொண்டு வாக்களித்தேன். ஜி.எஸ்.டி.க்குப் பிறகு ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்”, என கூறினார்.

மேலும், “ இப்போதுள்ள அரசாங்கம் மாற வேண்டும். தலித், பழங்குடியின மக்கள், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை புரிவதற்காக கொள்கை வகுத்துள்ள கட்சிக்கு வாக்களித்தேன். விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை.”, எனவும் தெரிவித்தார். முன்னதாக அவர், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிப்பேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காலை 11:35: காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கயாசுதீன் ஷேக், அக்கட்சியின் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெறுவார் என கூறினார்.

காலை 11:10:மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பிறகும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 10:50: காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் போலா கோஹில் என்பவர், பாஜகவிற்கு வாக்களித்ததாக அக்கட்சியின் மூத்த தலைவர் குன்வர்ஜி பவாலியா தெரிவித்தார்.

காலை 10:30: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியது.

காலை 10:10: பெங்களூரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 44 பேர் வாக்களிக்க சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

அதேசமயம், சங்கர் சிங் வகேலாவின் மகன் மஜேந்திரசிங் வகேலா வாக்களித்தார். ஆனால், அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை தெரிவிக்கவில்லை.

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பாஜக வேட்பாளருக்கே வாக்களிப்பர் என தெரிவித்தார். ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ஜெயந்த் படேல், கட்சித்தலமை உத்தரவின் படி வாக்களித்ததாக கூறினார். அக்கட்சி, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

காலை 9:45: பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கூறினர். இது தேர்தல் விதிமுறையை மீறும் செயல். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களான தர்மேந்திர ஜடேஜா, ராகவ்ஜி படேல் ஆகியோர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக தெரிவித்தனர். இது காங்கிரஸ் வேட்பாலர் அகமது படேலுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

காலை 9:40: வாக்குப்பதிவு துவங்கி 40 நிமிடங்களில் 16 வாக்குகள் பதிவாகின.

காலை 9:35: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சங்கர் சிங் வகேலா, வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது, தான் காங்கிரஸ் உறுப்பினர் அகமது படேலுக்கு வாக்களிக்கவில்லை என கூறினார். “காங்கிரஸ் கட்சி வெற்றிபெறாது என தெரிந்தபிறகு அக்கட்சிக்கு வாக்களிப்பதில் என்ன பயன் உள்ளது? அதனால், நான் அகமது படேலுக்கு வாக்களிக்கவில்லை”, என கூறினார். இதனால், வகேலாவின் ஆதரவாளர்களும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காலை 9:15:காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சங்கர் சிங் வகேலா, குஜராத் முதலமைச்சர் விஜய்சிங் ரூபானி, அகமது படேல் ஆகியோர் சட்டப்பேரவைக்கி வந்தனர்.

காலை 9:10:தேசிய காங்கிரஸ் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் பாஜகவிற்கும், மற்றொருவர் காங்கிரஸ் உறுப்பினருக்கும் வாக்களித்ததாக என்.டி.டி.வி. தொலைக்காட்சி செய்தி வழங்கியது.

காலை 9:05: குஜராத் சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு துவங்கியது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close