முன்மாதிரி பள்ளி: நன்றாக பள்ளிக்கு வருகைதரும் மாணவிகளின் வீடுகளுக்கு கழிவறை பரிசு

உத்தரபிரதேசத்தில் உள்ள சிறிய கிராமத்தில் செயல்படும் பள்ளியொன்றில் வருகைப்பதிவை கடைபிடிக்கும் மாணவிகளின் வீடுகளுக்கு கழிவறை கட்டித் தருகிறது பள்ளி நிர்வாகம்.

தினமும் பள்ளிக்கு வருகை தந்து, வருகைப்பதிவேட்டை முறையாக கடைப்பிடிக்கும் மாணவர்களுக்கு பல பள்ளிகளில், சின்ன சின்ன பரிசுப்பொருகள், சிறிய தொகை ஆகியவற்றை அளித்து பள்ளி நிர்வாகம் ஊக்கப்படுத்தும். இன்னும் சில பள்ளிகளில் கூடுதல் மதிப்பெண்கள் கூட வழங்குவார்கள். ஆனால், உத்தரபிரதேசத்தில் உள்ள சிறிய கிராமத்தில் செயல்படும் பள்ளியொன்றில் வருகைப்பதிவை நன்றாக கடைபிடிக்கும் மாணவிகளின் வீடுகளுக்கு கழிவறை கட்டித் தருகிறது பள்ளி நிர்வாகம். திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழித்து, சுகாதாரத்தை காக்க அப்பள்ளி நிர்வாகம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாஹர் கிராமத்தில் அறக்கட்டளை ஒன்றால் நடத்தப்பட்டு வரும்
பெண்கள் பள்ளி பர்தாதா பர்தாதி பள்ளிக்கூடம். இந்த கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் அதிகளவில் உள்ளது. இதனால், குறிப்பாக பெண்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சுகாதார சீர்கேடுகளும் பரவுகிறது.

அதனால், அப்பள்ளியில் 70 சதவீதம் வருகைப்பதிவை கொண்டிருக்கும் மாணவிகளின் வீடுகளில் கழிவறைகள் கட்டித்தந்து பரிசாக அளிப்பதை பள்ளி நிர்வாகம் கடைபிடித்து வருகிறது. இதற்கான பணம் முழுவதையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது. இதனால், கழிவறை இல்லாமல் அவதியடைந்த மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த பள்ளியை சாம் சிங் என்பவர்தான் நடத்தி வருகிறார். வெளிநாடு வாழ் இந்தியரான இவர், 40 வருடங்கள் அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு இந்தியா திரும்பினார். கடந்த 2000-ஆம் ஆண்டு பெண்கள் பள்ளியை இக்கிராமத்தில் ஆரம்பித்தார்.

”ஒருவரது தனிப்பட்ட உரிமைகள் காக்கப்பட வேண்டும். ஆனால், பெண்கள் திறந்தவெளியில் மலம் கழித்தால் அவர்களுடைய மனநிலைமை எப்படி இருக்கும்? அவள் எப்படி அந்த சூழ்நிலையில் வளர்வாள்? அதனால், பெண் குழந்தைகள் இந்த கொடுமையிலிருந்து மீள வேண்டும் என நான் நினைத்தேன். இதனால், அவர்களுடைய தலைமைப் பண்பு வளரும். அந்த பெண்களின் மூலமாக, அவர்கள் குடும்பத்திற்கு கழிவறை கிடைக்கும்போது, அந்தப் பெண் வீட்டிற்கு முக்கியவளாக கருதப்படுவாள்.”, என வீரேந்தர் சாம் சிங் கூறுகிறார்.

சாம் சிங் அக்கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சென்று வீட்டிலுள்ள பெண்களை பள்ளிக்கு அனுப்புமாறு கூறுவார். “இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, ஸ்நாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. படிப்பதற்கு தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. நோட்டு புத்தகங்கள், பென், பென்சில் என அனைத்தும் இலவசம். சீருடை தருகிறோம். தினமும் 10 ரூபாய் மாணவிகளுக்கு வழங்குவோம். ஆறாம் வகுப்பிலிருந்து வருகைப்பதிவுக்கும் தினமும் 10 ரூபாய் வழங்கப்படும்.”. என அப்பள்ளியின் மேலாளர் ஜோஸ் கூறுகிறார். மானிய விலையில் சைக்கிளும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close