/tamil-ie/media/media_files/uploads/2017/09/jayanthi-natarajan.jpg)
சிபிஐ வலையில் ஜெயந்தி நடராஜன் சிக்கியது குறித்தும், அவர் மீதான வழக்கின் முழு பின்னணியும் தெரிய வந்திருக்கிறது.
மன்மோகன் சிங்கின் இரண்டாவது முறை ஆட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்தின் பேத்தி இவர். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர், படித்தவர் என்ற அடிப்படையில் காங்கிரஸில் செல்வாக்குடன் வலம் வந்தார்.
2011-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற இவரை 2013 டிசம்பரில் ராகுல் காந்தி மறைமுகமாக தலையிட்டு ராஜினாமா செய்ய வைத்தார். இவரது துறையின் சில முறைகேடுகள் பற்றி தெரிய வந்ததாலேயே அந்த நடவடிக்கையை அவர் எடுத்ததாக பேசப்பட்டது. 2014 ஜனவரியில் காங்கிரஸில் இருந்தும் விலகிய ஜெயந்தி, அதன்பிறகு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார்.
பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுப்பதற்கு இவரது பதவி காலத்தில் பெரும் தொகை வசூலிக்கப்பட்டதாக புகார்கள் சொல்லப்பட்டன. இதையே 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில், ‘ஜெயந்தி வரி’ என விமர்சித்தார், அப்போதைய பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக பெரிய பிரச்னைகள் இல்லாமலேயே ஒதுங்கியிருந்தார் ஜெயந்தி.
இந்தச் சூழலில்தான் செப்டம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் சென்னை ஆழ்வார்பேட்டையில் ஜெயந்தி நடராஜனின் இல்லத்தில் சிபிஐ புகுந்து சோதனை நடத்தியது. அன்று இரவு வரை, சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை குறித்து ஜெயந்தி நடராஜன் கருத்து எதுவும் கூறவில்லை.
ஆனால் 10 பக்கங்களைக் கொண்ட சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் இந்த சோதனைக்கான காரணங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதிலுள்ள அம்சங்கள்:
டெல்லி சிபிஐ தலைமை அலுவலக இன்ஸ்பெக்டர் எஸ்.கே.வர்மா 7-9-2017 அன்று மாலை 4.30 மணிக்கு தனது உயர் அதிகாரிகளிடம் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் சிபிஐ இந்த முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முன்னாள் அமைச்சர் இருந்த ஜெயந்தி நடராஜன், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள எல்க்டோ ஸ்டீல் காஸ்டிங் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உமங் கெஜ்ரிவால், இவரது மேற்படி நிறுவனம், மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் இதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்.
சிபிஐ பதிவு செய்துள்ள இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர். எண் ஆர்.சி 2172017ஏ0021. குற்றச்சதி, பதவியை தவறாக பயன்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் இந்த வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். குற்றம் நடந்த இடங்களாக ஜார்கண்ட் மாநிலமும் டெல்லியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிபிஐ இன்ஸ்பெக்டர் எஸ்.கே.வர்மா கூறியிருக்கும் புகார் அறிக்கை வருமாறு... ஜார்கண்டை சேர்ந்த எலக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் திட்ட அறிக்கை ஒன்றை கடந்த 2005-ம் ஆண்டு அந்த மாநில அதிகாரிகள், மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஜார்கண்ட் மாநிலம், சிங்பும் மாவட்டம் சரந்தா வனப்பகுதியில் இரும்பு மற்றும் மாங்கனீசு தாது வெட்டி எடுக்க 192.5 ஹெக்டேர் நிலத்தை குத்தகைக்கு கேட்டு வந்த திட்ட அறிக்கை அது!
நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த இந்த கோரிக்கைக்கு 4-2-2012 அன்று (ஜெயந்தி நடராஜன் மத்திய அமைச்சராக இருந்தபோது) மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி கொடுத்தது. சுற்றுச்சூழல் விதிகளுக்கும், சுரங்க விதிகளுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் விரோதமாக இந்த அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அனுமதிக்கு முன்பாகவே 19-5-2004 அன்று எலக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்திற்கும் ஜார்கண்ட் மாநில அரசுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் அது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆண்டுக்கு 3 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் வகையில் 9-1-2007 அன்று மாற்றியிருக்கிறார்கள்.
இதற்காக 2006-ம் ஆண்டு சுரங்கத்துறை அமைச்சகத்திடம் முன் அனுமதியை ஜார்கண்ட் அரசு கேட்டது. ஆனால் சுரங்க அமைச்சகம் கொடுத்த பதிலில், ‘192.5 ஹெக்டேர் நிலத்தை சுரங்கப் பணிகளுக்கு கொடுக்கும் முன்பு சுற்றுச்சூழல் விதிகள் மீறப்படவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள’ அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தவிர, 2003-ம் ஆண்டு திருத்தப்பட்ட வன விதிகளின் படி, இது போன்ற திட்டங்களுக்கு வன ஆலோசனைக் கமிட்டியின் ஒப்புதலும் அவசியம்.
இந்தச் சூழலில் 2008-ம் ஆண்டு மேற்படி 192.5 ஹெக்டேரில் 55.79 ஹெக்டேர் நிலத்தை மட்டும் வனம் அல்லாத பணிகளுக்கு ஒதுக்கும்படி எலக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் கோரிக்கையை ஜார்கண்ட் அரசு அனுப்பி வைத்தது. ஆனால் வன ஆலோசனைக் கமிட்டி இதை ஏற்கவில்லை. மேற்படி இடம், வன உயிரின சரணாலயம் என்பதை குறிப்பிட்டு 2008 அக்டோபரில் நிராகரித்தது.
இதே விவகாரம் 2010-ல் அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்பு மறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. விதிகளை ஆய்வு செய்த அவரும், இதில் மறு பரிசீலனைக்கு இடமில்லை என கூறிவிட்டார். 2010 ஜூலையில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இதே திட்ட அறிக்கையை மேற்படி ஸ்டீல் நிறுவனமும் ஜார்கண்ட் அரசும் அனுப்பி வைக்கின்றன. இதை உரிய பரிசீலனைக்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலக செயலாளர் அனுப்பி வைத்தார்.
எனவே மீண்டும் 2010 செப்டம்பரில் மீண்டும் வன ஆலோசனைக் கமிட்டி முன்பு இந்த விவகாரம் பரிசீலனைக்கு வந்தது. யானைகள் மிகுந்த சிங்பும் வனப்பகுதியில் இந்த சுரங்கப் பணிக்கு திட்டமிடுவதால் இதை அனுமதிக்கவே முடியாது என மீண்டும் வன ஆலோசனைக் கமிட்டி பரிந்துரைத்தது.
இதன்பிறகு 13-7-2011-ல் ஜெயந்தி நடராஜன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவிக்கு வந்தார். அதன்பிறகும் ஜார்கண்ட் அரசும், மேற்படி ஸ்டீல் நிறுவனமும் சளைக்காமல் முயற்சிகளை மேற்கொண்டன. 4-2-2012 அன்று ஜெயந்தி நடராஜனின் இலாகா மேற்படி சுரங்கப் பணிக்கு 55.79 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது. இதில்தான் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு ஜெயந்தி நடராஜன் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியிருக்கிறது.
அதாவது, சுமார் 7 ஆண்டுகளாக பல்வேறு துறைகளும் விதிமுறைகளை சுட்டிக்காட்டி அனுமதி கொடுக்காத சுரங்கப் பணிக்கு ஜெயந்தி நடராஜன் பதவிக்கு வந்து 7 மாதங்களில் அனுமதித்ததுதான் விவகாரமே! இதில் ஆவணங்கள் அடிப்படையில் ஜெயந்தி நடராஜனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது. கைது செய்யப்படும் வாய்ப்பும் இருப்பதாக சிபிஐ வட்டாரத்தில் கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.