"தனியார் நிறுவனங்களிடம் தகவல்களை பரிமாறும்போது அரசிடம் பகிரக்கூடாதா?”: உச்சநிதிமன்றம் சரமாரி கேள்வி

ஆதார் அட்டைக்கு எதிரான பிற விவகாரங்களை, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு, இந்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அனுப்பி வைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆதார் எண்ணால் ஒருவருடைய தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில், ஒருவர் தனியார் நிறுவனங்களிடம் தங்களது விவரங்களை அளிக்கும்போது அரசுடன் பகிர்ந்துகொள்வதில் ஏன் அசௌகரியமாக உணர்கின்றனர் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆதார் எண்ணால் ஒருவருடைய தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படவில்லை எனவும், அதனால் ஒருவருடைய தனியுரிமை மீறப்படுவதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரண்டாம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருவரது தனியுரிமை என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கப்பட்டிருக்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், “ஒருவர் ஐஃபோன் அல்லது ஐபேட்-ஐ தன்னுடைய விரல்ரேகை பதிவின் மூலம் பயன்படுத்தும்போது, அவருடைய தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பொதுவெளிக்கு வந்துவிடுகின்றன. இதையே அரசாங்கம் செய்யும்போது அதில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா?”, என நீதிபதி டி.ஒய்.சந்திரகுட் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் சஜன் பூவைய்யாவிற்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், தகவல்களை வழங்குவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும், அவை பாதுக்காக்கப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் வாதாடினார். மேலும், சட்டத்திற்கு கட்டுப்பட்டு மட்டுமே ஒருவருடைய தகவல்களை கண்காணிக்க வேண்டும் என எடுத்துரைத்தார். அதுமட்டுமல்லாமல், அரசால் சேகரிக்கப்படும் தகவல்கள், தனியார் நிறுவனங்களின் கைகளில் கிடைத்து ஒருவருடைய தனிப்பட்ட விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் வாதாடினார்.

இதையடுத்து, தீவிரவாதத்துடன் தொடர்புடைய ஒருவரை கண்காணிக்க அவரது தகவல்களை பாதுகாப்பு நலன் கருதி பயன்படுத்தலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த வழக்கில் மத்திய அரசின் வாதம் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதங்களை எடுத்துரைக்க உள்ளார். இதையடுத்து, ஆதார் அட்டைக்கு எதிரான பிற விவகாரங்களை, ஏற்கனவே இதுகுறித்த வழக்குகளை விசாரித்து வரும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு, இந்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அனுப்பி வைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close