ரீங்கார ஒலிதான் இவர்களின் பெயர்: மரபை மறக்காமல் கடைபிடிக்கும் பழங்குடி மக்கள்

மேகாலயாவில் உள்ள கிராமம் ஒன்றில் எல்லோருக்கும் பெயர் வைக்கும் பழக்கம் இல்லை. மாறாக, அவர்களை பாடல் ரீங்கார ஒலியுடனேயே அழைப்பார்கள்.

குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் அவர்களுக்கு செய்யக்கூடிய முதல் கடமை பெயர் வைப்பது. யாருக்கும் வைக்காத பெயரை தம் குழந்தைக்கு வைக்க வேண்டும், மாடர்னாக அப்பெயர் இருக்க வேண்டும், என எல்லா பெற்றோர்களுக்கும் ஆசை இருக்கும். அதற்காக, இணையம், புத்தகங்கள் என எல்லாவற்றிலும் தேடித்துருவி குழந்தைக்கு பெயர் வைப்பார்கள். பல சமயங்களில் அப்பெயர்கள் வாயில் நுழைய முடியாதவையாக இருக்கும். பெயர் வைப்பது பற்றி ஏன் சொல்கிறேன் என்றால், மேகாலயாவில் உள்ள கிராமம் ஒன்றில் எல்லோருக்கும் பெயர் வைக்கும் பழக்கம் இல்லை. மாறாக, அவர்களை பாடல் ரீங்கார ஒலியுடனேயே அழைப்பார்கள். அது, பறவைகளின் ரீங்கார சத்தமாக கூட இருக்கலாம்.

மேகாலயாவில் சிரபுஞ்சியிலிருந்து கிழக்கே 26 கிலோமீட்டர் பயணித்தால் வரக்கூடிய அழகிய மலைக்கிராமம் கோங்தோங். அங்குதான் இந்த மரபு தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மலைக்கிராமத்தில், 12 குக்கிராமங்கள் உள்ளன. அவற்றில், நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். விவசாயம் இவர்களின் முதன்மை தொழில். காடுகளை சார்ந்தே இவர்களின் வாழ்க்கை நகர்கிறது.

இந்த பழங்குடியினம் தோன்றுவதற்கு முன்பிருந்தே, மனிதர்களை பெயர் சொல்லி அழைக்காமல், குறிப்பிட்ட ரீங்கார ஒலியுடன் அழைப்பது வழக்கமாகியிருக்கிறது. இன்றளவும் அது எல்லா தலைமுறையினராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ‘கூ…கூ..’, ‘கீ…கீ….’ உள்ளிட்ட சத்தங்களை குறிப்பிட்ட நபருக்கு எழுப்பி அவர்களை எழுப்புகின்றனர். அங்குள்ள அனைவருக்கும் அப்படித்தான்.

இதுகுறித்து, சான்ஸ்லி என்கிற ஆராய்ச்சி அறிஞர், “இந்த கிராமத்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, அவர் குறிப்பிட்ட ரீங்காரத்தை ‘ஹம்’ செய்துகொண்டே இருப்பார். அது என்ன சத்தமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதன்பிறகு, குழந்தை பிறந்தவுடன் அந்த சத்தத்தையே அங்குள்ளவர்கள் ஒலிப்பார்கள். அதன்மூலம், அந்த ஒலியே குழந்தையின் அடையாளமாக மாறிவிடும். இந்த பழக்கம், வேட்டைக் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். வேட்டையாடும்போது ஆபத்துக் காலங்களில் தங்கள் குழுக்களில் உள்ளவர்களை எச்சரிக்கை செய்ய இம்முறை பயனுள்ளதாக அமைகிறது.

இந்த பழக்கவழக்கம் தான் அவர்களது அடையாளம். “நான் ஒருவரை பார்த்தால், அவர்களுக்குரிய ஒலியை எழுப்புவேன். அதன்மூலம், நான் எந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்பதையும் மற்றவர்கள் அறிந்துகொள்வர். அந்த ஒலியை நாம் எழுப்பும் சுருதியை வைத்தே அவர் துயரத்தில் இருக்கிறாரா அல்லது மகிழ்ச்சியில் அழைக்கிறாரா என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.”, என காங்தோங் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் பாபு பிரியக் கூறுகிறார்.

இந்த கிராமத்து மக்கள் மரபு வழக்கங்களை காலப்போக்கில் அழித்துவிடாமல், இன்றும் இயல்பு மாறாமல் கடைபிடித்து வருகின்றனர். இது, ஆராய்ச்சியாளர்கள், மானுடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close