Advertisment

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு... வெளியேற முடியாமல் தவிக்கும் பெண்ணின் குடும்பம்

30 பேர் கொண்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு, வீட்டிற்கு வெளியே மெட்டல் டிடெக்டர் மற்றும் சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு... வெளியேற முடியாமல் தவிக்கும் பெண்ணின் குடும்பம்

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம் 3 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

கடந்த 2020-ம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில், பட்டியல் இனத்தை சேர்ந்த 19-வது பெண்னை, வேறு சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து பெண்ணின் உடலை அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு வந்த மாவட்ட நிர்வாகம் அவரது பெற்றோரின் அனுமதி இன்றி பெண்ணின் உடலைவ தகனம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில், சந்தீப், ரவி, லவகுஷ், ராமு என 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியாக சந்தீப் அறிவிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே சமயம் மற்ற மூவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 9 பேர் கொண்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் தற்போது பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய முகமூடி அணிந்த 30 பேர் கொண்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும் அவர்களின் வீட்டிற்கு வெளியே மெட்டல் டிடெக்டர் மற்றும் சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கூறுகையில்,

இவை அனைத்தும் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் தண்டிக்க உதவும் என்று நாங்கள் நம்பினோம். இதையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு கிராமத்தை விட்டு வெளியேற நினைத்தோம். எங்களால் இப்போது வெளியேற முடியவில்லை. மேலும் இந்த பாதுகாப்பின் கீழ் தொடர்ந்து இருப்போம். இது எங்களை பாதுகாப்பாக உணர வைக்கிறது. அதே சமயம் சிறைவாசம் போன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் தங்களைப் பார்க்க வரும் ஒற்றைப்படை உறவினரைத் தவிர, விருந்தினர்கள் எவரும் வரவில்லை என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். வீட்டிற்குள் நுழைவதற்கு, மூத்த சிஆர்பிஎஃப் (CRPF) அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் மற்றும் முறையான ஆவண சரிபார்ப்பைப் பின்பற்றி அவர்கள் வீட்டிற்குள் நுழைய முடியும் என்பதால் யாரும் வருவதில்லை என்று கூறியுள்ளனர்

இதனிடையே பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறிய 2020 ஆம் ஆண்டு முதல் இந்த குடும்பத்தில் உள்ள 3 சிறுமிகள் பள்ளிக்குச் செல்லவில்லை. "என் மகள் வெளியே சென்று விளையாடக்கூட முடியவில்லை" என்று ஒரு சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

மேலும் தங்கள் வீட்டைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு மற்றும் சமூகப் புறக்கணிப்பு காரணமாக எந்த வேலையும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தில் உள்ள ஆண்கள் தெரிவித்தனர். “எங்களுக்கு கிடைத்த 25 லட்ச ரூபாய் இழப்பீட்டில் காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களை வாங்குகிறோம். அதை நம்பித்தான் நாங்கள் வாழ்கிறோம். குறைந்தபட்சம் எங்கள் குழந்தைகள் பால் குடிக்கலாம், என்று நாங்கள் சமீபத்தில் ஒரு எருமை மாடு வாங்கினோம் என்று பெண்ணின் சகோதரர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா கூறுகையில், உத்தரபிரதேச அரசு இன்னும் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு அரசு வேலை வழங்கவில்லை. "அவர்களுக்கு வேலை வழங்குவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை," என்று கூறியுள்ளார்.

இதனிடையே இது தொடர்பான பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனி கூறுகையில், காய்கறிகளை வாங்குவது கூட கவலை நிறைந்த பணியாக உள்ளது. “காய்கறிகள் வாங்க பாதுகாப்பு வளையத்துடன் செல்ல வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் எங்களை வெளிப்படையாக மிரட்டுகிறார்கள், ”என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணின் உடைமைகள் அவள் விட்டுச் சென்றபோது அப்படியே இருக்கின்றன. அவளுடைய ஆடைகள் தீண்டப்படாமல் கிடக்கின்றன, அவளுடைய தையல் இயந்திரம் தூசி படிந்து இருக்கிறது. ஒரு சிறிய மூலையில், அவளது சாம்பல் ஒரு கலசத்திற்குள் இருக்கும். "குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் அந்த சாம்பலை கங்கையில் மூழ்கடிக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment