லடாக்கில் எல்லை கட்டுப் பாட்டுக் கோடருகே இந்திய-சீன ராணுவத்தினரிடையே 2 ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்தது.
இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தையை புதுப்பிக்க சீன அரசு முயன்று வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) மாநாடு சீனாவில் நடைபெறவுள்ளது.
அப்போது இரு தரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக மத்திய அரசிடம் சீனா தெரிவித்தது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்த மாதம் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளார். அத்துடன், கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்த சீன அதிகாரிகள் குழுவும் இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
மேலும், இந்தியா-சீனா இடையே சுமுக பேச்சுவார்தையை இரு நாடுகளிலும் நடத்தலாம் என சீனா தெரிவித்துள்ளது.
மோடி – இலங்கை அமைச்சர் சந்திப்பு; யாழ்ப்பாணம் ஏர்போர்ட் & துறைமுக திட்டங்களில் கவனம் செலுத்தும் இந்தியா
ஆனாலும், பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க செய்ய வேண்டும் என்பதில் சீனா குறியாக உள்ளது. அந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும் வருகை தரவுள்ளார்.
ரஷ்யா-இந்தியா-சீனா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லைப் பிரச்சினை தீராத சூழ்நிலையில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்திக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
கடைசியாக பிரேசிலில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர். கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபரில் சீன அதிபர், மாமல்லபுரத்துக்கு வருகை புரிந்தார்.
இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இவர்களின் சந்திப்புக்கு கொஞ்ச காலத்திற்கு முன்னர் தான் டோக்லாம் பிர்ச்சனை முடிவுக்கு வந்தது.
சீன வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதை நோக்கும்போது இரு தரப்பு உறவை மீண்டும் பழைய நட்புறவு நிலைக்கு அழைத்துச் செல்ல சீனா முடிவு செய்துள்ளது தெரிகிறது.
எனினும், அவ்வளவு சீக்கிரத்தில் இரு நாடுகளுக்கு இடையே நீடிக்கும் எல்லை பிரச்சினை முடிவுக்கு வராது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி பாங்காங் ஏரி பகுதியிலும், கிழக்கு லடாக்கிலும் நேரிட்ட மோதல் காரணமாக ஆயிரக்கணக்கான வீரர்களை இரு நாடுகளும் நிலை நிறுத்தியது.
ஜனவரி 2021 இல்,பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர நலன்கள் ஆகியவை இரு நாடுகளின் நல்லுறவுகளை தீர்மானிக்கும் காரணிகள் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil