சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது... பாகிஸ்தானின் தொடர் கோரிக்கைகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் இந்தியா...

தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரையில் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டம்

சார்க் உச்சி மாநாடு 2018  : சார்க் அமைப்பின் (South Asian Association for Regional Cooperation ) 8 உறுப்பு நாடுகள் இணைந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு ஒன்றினை நடத்தும். ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய எட்டு நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் ஆகும்.

இந்த வருடம் சார்க் மாநாடு பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இருக்கும் நாடுகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளது பாகிஸ்தான் அரசு. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல் கூறியிருந்தார்.

சார்க் உச்சி மாநாடு 2018  – இந்தியா பங்கேற்காது

இந்நிலையில், சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருக்கிறார். தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

2016ம் ஆண்டு உரியில் நடத்தப்பட்ட தீவிரவாததாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, அந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாட்டில் பங்கேற்கவில்லை. வங்கதேசம், பூடான், மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும் அந்த ஆண்டில் சார்க் மாநாட்டில் பங்கேற்கவில்லை. அதனைத் தொடர்ந்து சார்க் மாநாடு நிறுத்தி வைக்கப்பட்டது.

பாகிஸ்தானின் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரிக்கும் இந்தியா

பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் ராவி நதிக்கரையோரம் அமைந்திருக்கிறது தர்பார் சாஹிப் குருத்வாராவும், இந்தியாவில் உள்ள குருதாஸ்பூரையும் (தேரா பாபா நானக்கையும்) இணைக்கும் கர்தார்பூர் வழித்தடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு சுஷ்மா ஸ்வராஜிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த அழைப்பினை நிராகரித்துவிட்டார். ஆனால் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷிம்ரத் கவுர் மற்றும் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள் என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : கர்தார்பூர் வழித்தடம் குறித்த முழுமையான செய்திகளை ஆங்கிலத்தில்  படிக்க

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close