ஏமனில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் டாம் உழுன்னாலில் மீட்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ராமபுரத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ பாதிரியார் டாம் உழுன்னாலில்(56). பெங்களூர், கோலார் தங்கவயல், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பங்கு தந்தையாக டாம் உழுன்னாலில் பணியாற்றினார். அவர், கோலார் தங்கவயலில் உதவி பங்கு தந்தையாக இருந்தபோது, தமிழர்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பாதிரியார் டாம் ஏமன் நாட்டில் உள்ள ஏடென் நகரில் உள்ள அன்னை தெரசா தொண்டு இல்லத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினரால் பாதிரியார் டாம் உழுன்னாலில் கடத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பாதிரியார் டாம் உழுன்னாலில், இந்திய அரசிடமும், போப் பிரான்ஸுக்கும் கோரிக்கை விடுக்கும் வீடியோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது.
இந்த விவகாரத்தில், பாதிரியாரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டது. இந்த நிலையில், பாதிரியார் டாம் உழுன்னா மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாது: “பாதிரியார் டாம் உழுன்னா மீட்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
I am happy to inform that Father Tom Uzhunnalil has been rescued.pic.twitter.com/FwAYoTkbj2
— Sushma Swaraj (@SushmaSwaraj) 12 September 2017