சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாகவும், புதுப்பிக்கப்பத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் விதமாகவும் டெல்லியில் முற்றிலுமாக சோலார் பயன்பாட்டுடன் வடிவமைக்கப்பட்ட சோலார் ரயிலை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வெள்ளிக்கிழமை துவங்கிவைத்தார்.
ஏற்கனவே, டெல்லியில் ரயில்வே ஹோட்டல் ஒன்று முற்றிலுமாக சோலார் பயன்பாடு கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. அதனை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு துவங்கி வைத்தார்.
2016-2017-ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சூரிய மின்சக்தி மூலம் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் முற்றிலும் சோலார் பயன்பாட்டுடன் சோலார் ரயிலை இந்திய ரயில்வே துறை வடிவமைத்துள்ளது. இந்த ரயில் ஆயிரத்து 600 குதிரைத் திறன் கொண்டது. சோதனை முயற்சியாக முதலில் ஆறு பெட்டிகளுடன் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 16 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயிலின் ஒட்டுமொத்த மின்தேவையும் சோலார் பேனல்கள் மூலமே நிறைவேற்றப்படும்.
இந்த ரயிலின் மூலம் ஆண்டுக்கு 239 டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியீட்டை குறைக்க முடியும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனை துவங்கிவைத்த பின் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தன் ட்விட்டர் பக்கத்தில், சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன என பதிவிட்டார்.
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில், ரயில் நிலைய மேம்பாலங்களிலும் சோலார் பேனல்களை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், சென்னை மற்றும் அமிர்தசரஸிலும் சோதனை முயற்சியாக சோலார் ரயில் பெட்டிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.