பெட்ரோலியம் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து தான் - ஒபெக் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேச்சு

நியாயமான விலையை பெட்ரோலிய பொருட்களுக்கு விதிக்க வேண்டும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியன்னாவில் பேச்சு

தற்சமயம் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியன்னாவில் இருக்கின்றார். பெட்ரோலிய பொருட்களுக்கு நியாயமான விலையினை வைக்க வேண்டும் என்று ‘ஒபெக்’ கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

14 நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு தான் பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை தீர்மானிக்கின்றது. எப்போதெல்லாம் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்கின்றதோ, அப்போதெல்லாம் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மொத்தமாக பாதிப்படைகின்றது. விலையை ஒரு குறிப்பிட்ட காலம் வரையாவது சீராக வைத்திருந்தால் நலமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு பேரலின் விலை 60 டாலருக்கும் கீழாக குறையும் போதும், உள்நாட்டு பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியில் போடப்பட்டிருக்கும் முதலீடும் அடிவாங்கத் தொடங்கும் என்பதும் உண்மை.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி தொடர்ந்து ஆறு நிதியாண்டுகளாக குறைந்து கொண்டே வந்துள்ளது. எண்ணெய் வளம் மிகுந்த இடத்தில் இருந்து ட்ரில்லிங் மூலம் பெட்ரோலியப் பொருட்களை எடுப்பதில் தொடங்கி அதனை தரம் பிரிப்பது வரையான உற்பத்தி முறையில் தாமதங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவை அனைத்தையும் விட மிக முக்கியமான பிரச்சனையாக இருந்தது இவ்வுற்பத்திக்கான முதலீடு தான்.

தனியார் நிறுவனங்கள், அதிக அளவில் பெட்ரோலியத்துறையில் முதலீடுகள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். உலக அளவில், பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் 24வது இடத்தில் இருக்கின்றது. உள்நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 15%த்தினை பூர்த்தி செய்கின்றது இந்தியாவில் இருந்து பெறப்படும் எரிபொருட்கள். அடுத்த பத்து வருடங்களுக்கு உள்நாட்டில் அதிக அளவு உற்பத்தியினை உருவாக்க விரும்பினால் கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் என்றும் கூறியுள்ளார் இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச்சின் (India Ratings and Research) தலைவர் விவேக் ஜெயின். எனவே பெட்ரோல் விலை சர்வதேச அளவில் குறையும் போது, இந்தியாவின் பெட்ரோலிய நிறுவனங்கள் மீது செய்யப்படும் முதலீட்டின் அளவும் குறையும்.

ஒஎன்ஜிசி, ஆயில் இந்தியா, மற்றும் இதர தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கைர்ன் இந்தியா, எஸ்ஸார் ஆயில், குஜராத மாநில பெட்ரோல் கார்ப்ரேஷன், ஜூபிலண்ட் ஆயில் மற்றும் கேஸ் நிறுவனம், ஃபோக்கஸ் எனெர்ஜி, நஃப்தோகஸ் மற்றும் இதர நிறுவனங்கள் இந்தியாவில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்தியாவின் பெட்ரோலிய இறக்குமதியினை 10% குறைக்கும் அளவிற்காவது உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியினை அதிகப்படுத்த வேண்டும். புதிய எண்ணெய் வயல்களை கண்டுபிடிப்பதிற்கு கொஞ்சம் காலம் தேவைப்படுவதால், அயல்நாட்டினரின் உதவியுடன் இருக்கின்ற வயல்களில் எண்ணெய் உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும் .

அமெரிக்கா ஆரம்ப காலத்தில் அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்பவர்களாகவும், உபயோகிப்பவர்களாகவும் இருந்தார்கள். பின்பு அதிக அளவு பெட்ரோலியத்தை இறக்குமதி செய்பவர்களாகவும், உபயோகிப்பவர்களாகவும் இருந்தார்கள். மீண்டும் அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்பவர்களாகவும், உபயோகிப்பவர்களாகவும் மாறினார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா எண்ணெயில் அதிக அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் டாலர் விலையும் எண்ணெய் விலையும் ஒன்றுக்கொன்று இணை பிரியாத ஒன்றாக அமைந்துவிட்டது.

×Close
×Close