Advertisment

முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை: புதிய சட்டம் தயார்

முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் வகையிலான சட்ட முன்வரைவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
triple talaq, triple talaq punishment, muslim women act, instant triple talaq, triple talaq ban,

இஸ்லாமிய மத வழக்கப்படி முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் வகையிலான சட்ட முன்வரைவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

Advertisment

அதன்படி, இஸ்லாமிய மத வழக்கப்படி முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் கிடைக்கும்படி சட்ட முன்வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. நேரிலோ, எழுத்துப்பூர்வமாகவோ, வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட எந்த தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் முத்தலாக் கூறக்கூடாது. மேலும், கணவர் முத்தலாக் கூறினால் மனைவி உடனடியாக நீதிமன்றம் செல்லவும், தனக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் கோரவும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தன் பாதுகாப்பில் வளர்க்கவும் முஸ்லிம் பெண் கோருவதற்கு இந்த சட்ட முன்வரைவு வழிவகை செய்கிறது.

வரும் டிசம்பர் 5 முதல் ஜனவரி 15 வரை நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்த சட்ட முன்வரைவு குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சட்ட முன்வரைவு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதுகுறித்து, மாநிலங்களின் கருத்துகளை உடனடியாக தெரிவிக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், இந்த சட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.

திருமணம் மற்றும் விவாகரத்து பிரிவு பொது பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னணி:

இஸ்லாமிய மதத்தில் மனைவியிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கம் இருந்தது. இந்த வழக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆகஸ்டு மாதம், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில், நீதிபதிகள் நரிமன், யு.யு.லலித், குரியன் ஜோசஃப் ஆகியோர் முத்தலாக் முறை சட்ட விரோதமானது என கூறினர். ஆனால், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக் முறைக்கு 6 மாத காலம் தடை விதிக்க வேண்டும், இதுதொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களில் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் அடங்கிய குழு, இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் இந்த சட்ட முன்வரைவை உருவாக்கியுள்ளனர்.

இந்தாண்டு முத்தலாக் தொடர்பாக மொத்தம் உள்ள 244 வழக்குகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன் 177 வழக்குகளும், தீர்ப்புக்கு பின் 67 வழக்குகளும் இந்தாண்டு மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Triple Talaq
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment