2-வது திருமணம் செய்த ஐ.பி.எஸ்.கள் தப்ப முடியாது : அதிரடி பணி நீக்கம் ஆரம்பம்

இதர மாநிலங்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.களின் பணிதிறன் குறித்து ரெகுலராக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

2-வது திருமணம் செய்த ஐ.பி.எஸ். அதிகாரியை மத்திய அரசு அதிரடியாக டிஸ்மிஸ் செய்திருக்கிறது. அனைத்து மாநிலங்களும் இந்த நடைமுறையை பின்பற்றவும் அறிவுறுத்தியிருக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய பிரிவு அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்படுவது வெகு அபூர்வம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அருணாசலபிரதேசம் மற்றும் சில யூனியன் பிரதேசங்களுக்கான 1991-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.நரசிம்மாவை மத்திய அரசு பணியில் இருந்து விடுவித்தது. இந்திய விளையாட்டு ஆணைய செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவரான இவர் மீது சொத்துக் குவிப்பு புகார் உள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையையும் எதிர்கொண்டு வருகிறார்.

அந்த நடவடிக்கை நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்.கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதற்குள் இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய உள்துறை. அவர்களில் ஒருவர், ஏ.எம்.ஜூரி. இன்னொருவர், கே.சி.அக்ரவால்! இவர்கள் இருவருமே சத்தீஷ்கர் மாநில கேடர் அதிகாரிகள்!

ஜூரி, 1983-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில போலீஸ் பணியில் சேர்ந்தார். 2000-மாவது ஆண்டில் இவர் ஐ.பி.எஸ். அந்தஸ்தை பெற்றார். அக்ரவால், 1985-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில போலீஸ் பணியில் இணைந்து, 2002-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அந்தஸ்தை அடைந்தார். இருவருமே தற்போது டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணிபுரிந்து வந்தார்கள்.

இவர்களில் ஜூரி, தனது முதல் மனைவி உயிருடன் இருந்தபோதே 2-வதாக இன்னொரு பெண்ணை மணந்தார். 2-வது மனைவிக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தத் தகவல், சத்தீஷ்கர் உயர் அதிகாரிகள் பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் யாரும் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வளவு ஏன்? ஜூரியின் முதல் மனைவிகூட இதை ஒரு பிரச்னை ஆக்கவில்லை.

ஆனால் விதி, 2-வது மனைவியின் குழந்தைகள் ரூபத்தில் விளையாடியது. அரசு சலுகைகள் சிலவற்றுக்காக ஜூரியின் வாரிசுகளாக இந்தக் குழந்தைகளை அங்கீகரிக்க கேட்டு, 2-வது மனைவி போலீஸ் துறையை நாடினார். அப்போதுதான் விவகாரம் வில்லங்கம் ஆனது. பள்ளிச் சான்றிதழ்களில் மேற்படி இரு குழந்தைகளுக்கும் தந்தையாக ஜூரியின் பெயரே பதிவாகியிருந்தது. அதேசமயம், ஜூரி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பதும் ஆவணங்கள் மூலமாக உறுதி ஆனது.

அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன் படி இது பணிநீக்கம் செய்யத்தக்க குற்றம் ஆகும். இந்த அடிப்படையில் ஜூரி பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

மற்றொரு ஐ.பி.எஸ். அதிகாரியான அக்ரவால் மீது, ஊழல் புகார்கள் உள்ளன. பொதுவாக ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி தொடர்பாக மாநில அளவில் அமைக்கப்பட்ட குழு சீரான கால இடைவெளியில் ஆய்வு நடத்தும். அந்த ஆய்வில் அக்ரவாலின் பணியில் திருப்தியின்மையை அந்தக் குழு வெளிப்படுத்தியது. இந்த ‘ரிப்போர்ட்’டை சத்தீஸ்கர் அரசு, மத்திய உள்துறைக்கு அனுப்பியது. உள்துறையின் பணி நியமனக் கமிட்டி, மேற்படி அக்ரவாலையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதே போன்று இதர மாநிலங்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.களின் பணிதிறன் குறித்து ரெகுலராக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது. முக்கியமாக 2-வது மனைவி வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு பெரிய ஆபத்து இருக்கிறது.

×Close
×Close