டெல்லி ஐந்தர் மந்தர் பகுதியில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று (மே 28) புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். அதோடு ஐந்தர் மந்தர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள், அங்கிருந்த மெத்தை, பாய், ஸ்பீக்கர் கருவிகளை அகற்றி போலீசார் அவற்றை டெம்போக்கள், டிரக்குகளில் கொண்டு சென்றன.
முன்னதாக, பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், சங்கீதா போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை கைது செய்து தடுப்பு காவலில் வைத்தனர்.
நடவடிக்கை இல்லை
தற்போது இந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ள நிலையில், மல்யுத்த வீரர்கள், பா.ஜ.க எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங்குக்கு எதிரான போராட்டம் மீண்டும் தொடங்கும் என கூறியுள்ளனர்.
பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து கிட்டதட்ட 4 மாதங்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்க கோரி போராடி வருகின்றனர். எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
காவல்துறையினர் கூற்றுப்படி, மொத்தம், 700 மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். மாலை 7 மணியளவில் பெண் மல்யுத்த வீரர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று கூறினர். அதே நேரத்தில் ஆண்கள் விடுவிக்கப்பட வில்லை என்றும் கூறினர்.
காவல்துறை சிறப்பு ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திபேந்திர பதக் கூறுகையில், மல்யுத்த வீரர்கள் செய்தது மிகவும் பொறுப்பற்ற செயல். இப்போது அவர்களை போராட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம். போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து வெளியேற வேண்டாம் என்று நாங்கள் அவர்களிடம் கேட்டுக் கொண்டோம், ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. 8-9க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். அவர்கள் சட்டத்தை மீறி தேச விரோத செயல்களில் ஈடுபட்டனர். நாங்கள் இப்போது போராட்டம் நடத்தி வந்த இடத்தை அகற்றி விட்டோம் என்றார்.
தொடர்ந்து, நேற்று மாலை ட்விட் பதிவு செய்த மாலிக் போராட்டம் ஓயவில்லை என்று கூறினார். நாங்கள் அனைவரும் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஜந்தர் மந்தரில் எங்கள் சத்தியாகிரகத்தைத் தொடங்குவோம். இப்போது, பெண்கள் மல்யுத்த வீரர்களின் சத்தியாகிரகம் இருக்கும். சர்வாதிகாரம் அல்ல என்று பதிவிட்டிருந்தார்.
தடுப்பு காவலில் 550 பேர்
மற்றொரு மல்யுத்த வீரர், “நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். புனியா மற்றும் பலர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்டதும் நாங்கள் திரும்பி சென்று எங்கள் போராட்டத்தை தொடங்குவோம் என்றார்.
கல்காஜி, மயூர் விஹார், மாளவியா நகர், புராரி மற்றும் நஜப்கர் உள்ளிட்ட வெவ்வேறு காவல் நிலையங்களில் போராட்டக்காரர்கள் தடுப்பு வைக்கப்பட்டுள்ளனர், அதனால் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலும் டெல்லி பகுதியில் ஒன்று கூட முடியாது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், மல்யுத்த வீரர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீண்டும் பேராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். "தெளிவான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டபோதிலும், அவர்கள் சட்டத்தை மீறி செயல்பட்டனர். போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் மீண்டும் திரும்பினால், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது தடுப்பு வைக்கப்படுவார்கள் ”என்று பதக் கூறினார்.
காவல்துறையின் கூற்றுப்படி, ஜந்தர் மந்தரில் இருந்து 150க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தடுப்பு வைக்கப்பட்டனர். மாணவர்கள், ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் உட்பட 550 பேர் பல்வேறு பகுதிகளில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“