ஜே.என்.யூ மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கிச் சூடு

தொடர்ந்து பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி வரும் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தலைவர் உமர் காலித் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

தன் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக இரண்டு மாதங்களுக்கு முன்பே காவல்துறையிடம் கூறி பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி வேண்டிக் கொண்டார் உமர் காலித் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரிந்த உமர் காலித் ?

உமர் காலித் மற்றும் அவருடைய நண்பர் கன்ஹையா குமார் இருவரும் கடந்த 2016ம் ஆண்டு அப்சல் குருவை தூக்கிலிட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்க பல்கலைக்கழக வளாகத்திற்குள் போராட்டங்கள் வெடித்தன.

ஆங்காங்கே இந்தியாவிற்கு எதிராகவும், பிரிவினை வாதத்தினை தூண்டும் வகையிலும் கோஷங்கள் எழுப்பபட்டன.

இதனைக் காரணமாகக் கொண்டு இந்த இரண்டு நண்பர்கள் மற்றும் இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உமர் மற்றும் கன்ஹையா குமார் இருவரையும் கைது செய்து பின்பு ஜாமினில் வெளியிட்டார்கள் டெல்லி காவல் துறையினர்.

உமர் காலித், ஜே.என்.யூ மாணவர் தலைவர்

புகைப்படம் : அபிநவ் சாஹா / இந்தியன் எக்ஸ்பிரஸ்

உமர் காலித் மற்றும் அவர்களின் நண்பர்கள் சந்தித்த பிரச்சனைகள்

இந்த பிரச்சனைகளுக்கு பின்பு பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சுமூகமான நிலை இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒவ்வொரு வகையில் ஆளும் பாஜக கட்சியினரையும் அவர்களின் இந்துத்துவா கொள்கைகளையும் வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கினார்கள்.

இவர்களின் ஒவ்வொரு செயலையும் பல்கலைக்கழகம் முடக்கத் தொடங்கியது. 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட வன்முறைக்கு இவர்கள் தான் காரணம் என்று கூறி மாணவர்களுக்கு அபராதம் விதித்தது.

கடந்த மாதம் இவருடைய முனைவர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை ஏற்க மறுத்துவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம்.

இவர்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சித்தார்த் மிருதுள் ஆகஸ்ட் 16 வரை உமர் காலித் மீது எந்தவொரு நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று எச்சரிக்கையும் செய்துள்ளார்.

உமர் மீது கொலை வெறித் தாக்குதல்

இந்தியாவில் அதிக அளவு பாதுகாக்கப்பட்ட பகுதியான பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் இருக்கும் கான்ஸ்டியூசன் க்ளப் ஆப் இந்தியா என்ற இடத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்துள்ளார்.

தேநீர் அருந்துவதற்காக தன்னுடைய நண்பர்களுடன் வெளியே வந்த உமரை ஒரு நபர் பின்னால் இருந்து தாக்கி கீழே தள்ளி துப்பாக்கியால் சுட முயன்றிருக்கிறார். சுதாகரித்துக் கொண்ட உமரும் உமரின் மற்ற நண்பர்களும் அடையாளம் தெரியாத நபரை திருப்பித் தாக்கியுள்ளனர்.

உமர் காலித், ஜே.என்.யூ மாணவர் தலைவர்

கொலை செய்ய வந்தவர் கையில் இருந்து தவறி விழுந்த துப்பாக்கி

அச்சமடைந்த அந்நபர் சிறிது தூரம் ஓடி, துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். ஆனால் எந்த காயமுமின்றி உமர் மற்றும் அவர்களின் நண்பர்கள் தப்பி ஓடி வந்துவிட்டனர்.

துப்பாக்கியால் சுட முயன்ற நபரின் புகைப்படம் சிசிடிவி ஒளிபதிவில் இருந்து எடுக்கப்பட்டு அதனை மீடியாவிற்கு கொடுத்திருக்கிறது டெல்லி காவல் துறை.

ஏற்கனவே தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று உமர் காவல்துறையிடம் கூறி பாதுகாப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுதந்திர தினத்திற்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில் பாராளுமன்றம் அமைந்திருக்கும் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

உமர் காலித் கடுமையான கண்டனம்

இந்த நாட்டில் உண்மையான குற்றவாளிகள் இங்கே ஆளுங்கட்சியில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்லாது, ஊடகவியல் துறையில் இருக்கும் பெரிய பெரிய ஊடகவியலாளர்கள் தான் எனக்கு தேசத்துரோகி என்ற முத்திரை குத்த ஆசைப்படுகிறார்கள் என தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன்னுடைய வருத்தங்களை பதிவு செய்திருக்கிறார் உமர் காலித்.

குஜராத் வட்கம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, ஜே.என்.யூவைச் சேர்ந்த  செஹ்லா ரசீத் &  உமர் காலித் மூவருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் தரும் வகையில் மிரட்டல்கள்  வந்து கொண்டிருக்கிறது.

ஜிக்னேஷ் குஜராத்திலும், உமர் டெல்லியிலும், செஹ்லா ரசீத் ஸ்ரீநகரிலும் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ரவி புஜாரி என்ற பெயரில் மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close