‘15 நாள் தேவையில்லை, அதற்குள் மெஜாரிட்டியை காட்டுவேன்’: எடியூரப்பா உறுதி

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 LIVE UPDATES

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2018: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து எடியூரப்பா இன்று காலை 9.30 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்களில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குகள் நேற்று முன்தினம் (மே.15) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. 104 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம், 221 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 78 இடங்களை மட்டுமே கைப்பற்ற, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சி மஜத தலைமையில் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தது. இந்த ஆதரவை தேவகவுடா ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, நேற்று காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டமும் நடத்தப்பட்டன. இதில் தலைவராக மஜத மாநில தலைவர் குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். இரு சுயேச்சை உறுப்பினர்களும் மஜதவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், குமாரசாமி மற்றும் எடியூரப்பா ஆகியோர் ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து தங்கள் உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கின‌ர். கடிதத்தை பெற்றுக் கொண்ட ஆளுநர், சட்ட வல்லுனர்களுடன் இதுகுறித்து ஆலோசித்தார். இறுதியில், தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க நேற்று இரவு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதேசமயம், பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி, பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இன்று காலை 9.30 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பார் என்பதால் அதற்கு முன்னதாக வழக்கை விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. மனுவை அவசர வழக்காக இரவே விசாரிக்க, தலைமை நீதிபதியிடம் நேரம் கேட்குமாறும் பதிவாளரிடம் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

நள்ளிரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் காங்கிரஸ் மனுவின் விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெற்றது. ஆளுநர் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாஜக தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதாடினர். காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார்.

இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினருக்கும் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பதவியேற்பை மாலை 4:30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் எனவும், ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அளிக்க எடியூரப்பாவிற்கு உத்தரவிட வேண்டும் எனவும் சிங்வி வேண்டுகோள் விடுத்தார்.

ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கே.கே.வேணுகோபால் மற்றும் முகுல் ரோஹத்கி வாதாடிய நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் ஆய்வில் கீழ்தான் வரும் என நீதிபதி பாப்டே கூறினார். இதனால், எந்தவித தடையுமின்றி, இன்று காலை 9.30 மணிக்கு எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளது உறுதியாகி இருக்கிறது.

இதுகுறித்த Live Updates-ஐ உடனுக்குடன் அறிய தொடர்ந்து ஐஇதமிழுடன் இணைந்திருங்கள்.

மாலை 6.00 : ‘பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் தேவையில்லை, விரைவில் நிரூபிப்போம். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் பிரசாரத்தால் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது’ என கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா கூறினார்.

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ-க்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு, விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் எடியூரப்பா குற்றம் சாட்டினார்.

மாலை 04.45 –  பீகாரில் தனிப்பெரும் கட்சியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு. கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்ததை தொடர்ந்து முடிவு.

மாலை 04.10 – கோவாவில் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் 16 கோவா எம்எல்ஏக்களும் அணிவகுப்பாக சென்று ஆளுநரை சந்திக்கவுள்ளதாக தகவல்.

பிற்பகல் 03.30 – கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்த, ஆளுநர் முடிவுக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், “கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா, பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பதன் மூலம் அரசியலமைப்புச்சட்டம் அவருக்கு வழங்கியுள்ள ஒட்டுமொத்த அதிகாரத்தையும், தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார். அவரின் பதவிக்கும், அவர் சார்ந்திருக்கும் அலுவலகத்துக்கும் அவமரியாதையைத் தேடிக் கொடுத்துள்ளார்.” என குறிப்பிட்டுள்ளார்.

பிற்பகல் 03.10 – கர்நாடகா ஆளுநருக்கு எதிராக மாலை 5 மணிக்கு தமிழக காங்கிரஸ் போராட்டம். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

பிற்பகல் 03.00 – முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் என்.பி. அம்ருதீஷ் என்பவர் பொதுநல வழக்கு. எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய கட்சி மாறி வாக்களிக்க அனுமதிக்க கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பிற்பகல் 02.20 – ஆளுநர்கள் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுவது தமிழகத்திலும், கர்நாடகாவிலும் தொடர்கிறது – ஸ்டாலின்.

காலை 11.30 – கர்நாடக மாநிலத்தில் ரூ.1 லட்சம் வரை விவசாய கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி. கடன் தள்ளுபடிக்கான ஆணையில் தனது முதல் கையெழுத்தையிட்டார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா.

காலை 09.30 – எடியூரப்பா முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வாயிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் தர்ணா.

காலை 08.35 – கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகத்தில் எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

காலை 07.10 –  லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருடன் கோவிந்த காரஜோலா, ஸ்ரீராமலு, ஈஸ்வரப்பா, ஆர்.அசோக்கும் பதவியேற்க வாய்ப்பு.

காலை 06.50 – எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட். எடியூரப்பாவாக நானிருந்தால் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை காலை 10.30 வரை பதவியேற்க மாட்டேன். எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம்தான் தீர்மானிக்கும்.

காலை 06.00 – முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ள நிலையில், ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.

காலை 05.30 – மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு தீர்ப்பளித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி, “ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது. எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை நாளை காலை 10:30 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்தகட்ட விசாரணை நாளை காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.

×Close
×Close