கர்நாடகாவில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்! குவிக்கப்பட்டுள்ள மத்திய படையினர்

கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த காரசாரமான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது

 கடந்த சில தினங்களாக 223 தொகுதிகளிலும் அனல் பறக்கும் உச்சக்கட்ட பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார்கள். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சோனியா, ராகுல் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தனர். தேவேகவுடா தலைமையிலான மதச் சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி, ராகுல் இடையே கடுமையான வார்த்தை மோதல்கள் ஏற்பட்டன. ‘நான் 15 நிமிடங்கள் பேசினால் மோடி ஓடி விடுவார்’ என்று ராகுல் காந்தி கூற, அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘கர்நாடாகாவில் காங்கிரஸ் செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து 15 நிமிடங்கள் பேப்பர் இல்லாமல் ராகுல் காந்தி பேச தயாரா?. இந்தி, ஆங்கிலம் அல்லது அவரது தாய் மொழியில் கூட ராகுல் 15 நிமிடம் பேசலாம். ராகுல் பேச மட்டும்தான் செய்வார், ஆனால் நாங்கள் தான் வேலைக்காரர்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்திரா காந்தி காலத்தில் இருந்தே, ஏழை மக்களை முட்டாளாக்கி வெற்றிப் பெறுவதையே காங்கிரஸ் வழக்கமாக கொண்டிருக்கிறத. இப்போதும் பொய் மேல் பொய் பேசியே பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு விவசாயிகள் மீதும், ஏழை மக்களின் மீதும் என்றுமே அக்கறை இருந்தது இல்லை. உருளைக்கிழங்கில் இருந்து தங்கம் எடுக்க முடியும் என நினைப்பவர்கள் தான் இன்று விவசாயிகள் குறித்து அல்லும், பகலும் பேசி வருகின்றனர். கர்நாடகாவில் இதுவரை ஆட்சி செய்த எந்த காங்கிரஸ் அரசாவது தண்ணீர் பிரச்னையை தீர்த்துள்ளதா? கருப்பு பணத்தை நிரப்புவதில் தான் காங்கிரஸ் கட்சி குறியாக உள்ளது. கர்நாடகாவின் சிறப்பான எதிர்காலத்திற்காக காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும். ‘C’ என்பதற்கு காங்கிரஸ் என்றும் அர்த்தம் கொள்ளலாம். கரப்ஷன் என்றும் அர்த்தம் கொள்ளலாம்” என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஒருபடி மேலே சென்று கட்சி தொண்டர்களிடம், ”இது ஓய்வெடுக்கும் நேரம் அல்ல. வாக்காளர்கள் யாராவது ஓட்டுபோட வரவில்லையென்று தெரிந்தால், அவர்கள் வீட்டுக்குச் சென்று, அவர்களின் கை கால்களைக் கட்டி, தூக்கிக் கொண்டுவந்து பசவண்ட்ராய் -வுக்கு ஓட்டுப்போட வையுங்கள்’’ என்று பேசினார்.

இந்நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிந்த நிலையில், இன்று காலை முதல் பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள், தொண்டர்கள் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது என்றாலும் நாளை மாலை 5 மணி வரை வீடு, வீடாக சென்று அமைதியான முறையில் வாக்குச் சேகரிக்க எந்த தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சித் தொண்டர்கள் நாளை வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கி ஓட்டு சேகரிக்க உள்ளனர்.

நாளை இரவு எந்த பிரசார பணியிலும், எந்த கட்சியினரும் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டுப்பதிவை அமைதியான முறையில் நடத்த உள்ளூர் போலீசுடன் இணைந்து பணியாற்ற மத்திய படையினர் சுமார் 50 ஆயிரம் பேர் கர்நாடகாவில் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close