Advertisment

கர்நாடக பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மோதல்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரோகினி நோட்டீஸ்

ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி, ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
karnataka rohini sindhuri seeks Rs 1 crore d roopa public spat Tamil News

Karnataka IAS officer Rohini Sindhuri (Left) and IPS officer D Roopa Moudgil (Left) (File)

IAS officer Rohini Sindhuri IPS officer D Roopa Row Tamil News: கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றி வந்தவர் ரோகிணி சிந்தூரி (ஐ.ஏ.எஸ். அதிகாரி). அவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ரூபா (ஐ.பி.எஸ். அதிகாரி) பல்வேறு புகார்களை கூறினார். ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினார். மேலும் அவர் தொடர்பான சில ஆபாச படங்கள் உள்ளதாகவும், அதை தற்போதைக்கு வெளியிடவில்லை என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Advertisment

இதற்கு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்த ரோகிணி சிந்தூரி, ரூபா ஒரு மன நலம் பாதித்தவர் என்றும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தற்கொலையில் ரோகிணி சிந்தூரியின் தொடர்பு குறித்தும் ரூபா கூறினார். அதாவது ரோகிணி சிந்தூரிக்கும், டி.கே.ரவிக்கும் இடையே நடந்த குறுந்தகவல் பரிமாற்றம் குறித்தும் குறிப்பிட்டார்.

தலைமை செயலாளரிடம் மாறி மாறி புகார்

இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பெண் அதிகாரிகள் 2 பேருக்கும் நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கும்படி தலைமை செயலாளர் வந்திதா சர்மாவுக்கு உத்தரவிட்டார். மாநில அரசு நோட்டீசு அனுப்புவதற்கு முன்பே, ரோகிணி சிந்தூரி, ரூபா ஆகிய 2 பேரும் கடந்த செவ்வாய் கிழமையன்று விதான சவுதாவில் தலைமை செயலாளர் வந்திதா சர்மாவை தனித்தனியாக நேரில் சந்தித்து மாறி, மாறி புகார் கூறினர். அது தொடர்பான புகார் கடிதங்களையும் அவர்கள் வழங்கினர்.

ரோகிணி சிந்தூரி சட்டவிரோதமான முறையில் அரசு பணத்தை முறைகேடு செய்ததாகவும், மைசூரு ஆட்சியராக இருந்தபோது, அவர் தங்கியிருந்த அரசு பங்களாவில் கொரோனா காலத்தில் விதிகளை மீறி நீச்சல் குளம் கட்டி முறைகேடு செய்ததாகவும் குற்றம் சாட்டினார். அதோடு, திருப்பதியில் இந்து அறநிலைத்துறை விடுதி கட்டிட முறைகேடு, விதிகளை மீறி சொகுசு பங்களா கட்டுவது, வெளிநாட்டில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை வரி கட்டாமல் கொண்டு வந்தது என்று அடுக்கடுக்கான புகார்களை அவர் கூறினார்.

இதே போல் ரோகிணி சிந்தூரி, ரூபா சட்ட விதிகளை மீறி எனது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு எதிராக அவதூறு பரப்பி இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

இந்நிலையில், ரோகிணி சிந்தூரி, ரூபா ஆகிய 2 பேரையும் கர்நாடக அரசு அதிரடியாக பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அவர்கள் 2 பேரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் ரூபாவின் கணவரான சர்வே, நில ஆவணங்கள் துறை கமிஷனர் முனீஸ் மவுட்கல் அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் அதிகாரிகள் மோதிக்கொண்ட விவகாரத்தில் 3-வது நபர் அதாவது ரூபாவின் கணவரும் தண்டிக்கப்பட்டு உள்ளார். ஏனென்றால் ரோகிணி சிந்தூரி தொடர்பான தனிப்பட்ட புகைப்படங்களை ரூபாவுக்கு அவரது கணவர் தான் வழங்கியுள்ளார் என்றும், அதனால் அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

வாய்ப்பூட்டு - பேட்டி அளிக்க தடை

கர்நாடக அரசு ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். மற்றும் ரூபா ஐ.பி.எஸ். ஆகிய 2 அதிகாரிகளுக்கும் வாய்ப்பூட்டு போட்டுள்ளது. அதாவது ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு அவர்கள் 2 பேருக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், "தனிப்பட்ட புகார்கள், குறைகளை ஊடகங்களிடம் கூறியதை நீங்கள் தவிா்த்து இருக்க வேண்டும். அதனால் இனி நீங்கள் இத்தகைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து ஊடகங்களில் பேசக்கூடாது. அகில இந்திய சேவை நடத்தை விதிகளை நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்

இந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி, ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், ரூபா எழுத்துபூர்வமாக "நிபந்தனையற்ற மன்னிப்பு" கேட்க வேண்டும் என்றும், "நற்பெயர் மற்றும் மன வேதனையை இழந்ததற்காக" ரூ. 1 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிப்ரவரி 21 தேதியிட்ட அந்த நோட்டீஸில், "உங்கள் நடத்தையின் போக்கில் இருந்து, அவதூறான கருத்துகள்/அறிக்கைகள்/குற்றச்சாட்டுகளை, அறிந்தும், நம்புவதற்கு காரணமும் இருப்பதால், கூறப்பட்ட கருத்துக்கள்/அறிக்கைகள்/குற்றச்சாட்டுகள் பொய்யானவை, உண்மைக்குப் புறம்பானவை, நீங்கள் கடுமையான குற்றத்தைச் செய்துள்ளீர்கள். அதற்கு நீங்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் தண்டிக்கப்படுவீர்கள். எனவே, உங்களைப் பாதுகாக்கவும், கையாளவும், சட்டத்தின்படி தண்டிக்கவும் உங்களை நீங்களே பொறுப்பாக்கியுள்ளீர்கள்.

இது தொழில்முறை, தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் அவரது இமேஜை அழித்துவிட்டது. அவருடைய ஒழுக்க நேர்மை, குணம் மற்றும் நடத்தை ஆகியவை அவருக்குத் தெரிந்த அனைவருக்கும் மற்றும் குறிப்பாக நிர்வாக / அதிகாரத்துவ வட்டத்தில் விவாதப் பொருளாகிவிட்டதால் அவர் தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கிறார். எங்களிடம் சட்டஉதவி கோரியுள்ள அவர் அனுபவிக்கும் மன வேதனை, கணக்கிட முடியாதது தவிர கற்பனை செய்ய முடியாதது." என்று கூறப்பட்டுள்ளது.

மைசூரைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் கங்கராஜூ அவருக்கும் ரூபாவுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடலின் ஆடியோவை வெளியிட்ட சில மணிநேரங்களில் இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டது. ரூபாவின் கணவரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான முனிஸ் மவுட்கல், அவர் நில அளவை, குடியேற்றம் மற்றும் நிலப் பதிவேடுகள் துறையின் ஆணையராகப் பணியாற்றிய காலத்தில், அவர் சம்பந்தப்பட்டு இருப்பதை இந்த ஆடியோ கூறுகிறது. சிந்துரியின் குடும்பத்தின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உதவுவதற்காக சில நில விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ரோகினி சிந்துரி, அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக ரூபா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மன்னிப்பை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு ஊடகங்களுடன் பகிர வேண்டும். மேலும் சிந்துரி குறித்த பேஸ்புக் பதிவுகளையும் அவர் நீக்க வேண்டும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

India Karnataka Bangalore Karnataka State Ias Officer Ips Officers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment