மேகதாது அணை திட்டம் குறித்து ஆலோசனை: தமிழகம் வரும் கர்நாடக முதல்வர்

மேகதாது அணை திட்டம் குறித்து ஆலோசனை நடந்த தமிழகம் வரும் குமாரசாமி

காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு அணைகள் உள்ள நிலையில், புதிதாக மேகதாது எனும் பகுதியில் அணை கட்ட, முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது.

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில், 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் இந்த புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது. இந்த அணையின் மூலம், 67 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகாவால் தேக்கி வைக்க முடியும், பெங்களூரு நகரத்தின் குடிநீர் வசதிக்காகவே இது கட்டப்பட முடிவு செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் நிறைய சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கருதுகிறது. காவீர் நதிநீர் பங்கீட்டில், இரு மாநிலத்திற்கும் இடையே உள்ள பஞ்சாயத்து நாடறிந்தது. இதில், புதிதாக ஒரு அணையை கட்டினால் என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்க, மேகதாது அணையை கட்டியே தீருவது என தற்போதைய குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. அதேசமயம், இதனை கட்டவிடக் கூடாது என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது.

தற்போது கர்நாடகாவில் அதிக மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணை இன்று அதன் முழு கொள்ளளவை எட்டியது. மேட்டூருக்கு பிறகு காவிரியில் தண்ணீர் தேக்கி வைப்பதற்கு அணை இல்லை. இதனால் பெருமளவு தண்ணீர் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கர்நாடகாவில் அதிக மழை பெய்திருப்பதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து தண்ணீர் செல்லும் பவானி அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. இரு ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அதிக அளவில் இருக்கும் என்பதால் அந்த தண்ணீர் கடலில் கலந்து வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது வீணாகும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு மேகதாது ஆணை பொருத்தமாக இருக்கும். அவ்வாறு அணை கட்டினால் அதில் தண்ணீர் தேக்கி வைத்து கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பெங்களூருக்கு அனுப்ப முடியும். மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்திற்கும் தேவைப்படும் காலங்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கும் வசதியாக இருக்கும். எனவே இதற்கு தமிழகம் அனுமதிக்க வேண்டும்.

இதற்காக நான் சென்னை சென்று தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேச உள்ளேன். மேலும் விவசாய பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவேன். காவிரி நீர் கடலில் கலப்பதை தடுப்பதற்கு இதுதான் ஒரே வழி. இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழகத்தை கேட்டுக் கொள்கிறேன்.

மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு எந்த நேரத்திழும் தண்ணீர் வழங்கும் ஃபிக்சட் டெபாசிட் போல இங்கு தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். இப்போது தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே 85 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இயற்கை இன்னும் கை கொடுத்தால் அதிக தண்ணீரை திறந்து விடுவோம். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும். மேகதாது அணை மூலம் இன்னும் தமிழக விவசாயிகளுக்கு அதிகமாக எங்களால் உதவ முடியும்” என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close