கத்துவா வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை : காஷ்மீர் முதல்வர் மெஹபூபா!

கத்துவா சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா மஃப்டி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின்னர் 8 வயது சிறுமியின் உடலை வனப்பகுதிக்கு அருகில் வீசினர். ஒரு வாரத்திற்குப் பிறகு அக்குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனு அளித்தனர். அதே சமயம் வழக்கு விசாரணையை சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என்று அந்தச் சிறுமியின் தந்தை சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை மே 7ம் தேதி (இன்று) வரை விசாரிக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுமா அல்லது தந்தையின் கோரிக்கைபடி சண்டிகருக்கு மாற்றப்படுமா என்ற முடிவு தெரிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கத்துவா விவகாரம் குறித்து அம்மாநில முதல்வர் மெஹபூபா மஃப்டி பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில்,

“ஜம்மு காஷ்மீர் காவல்துறை இந்த வழக்கில் சிறப்பான விசாரணையை நடத்தி வருவது மிகவும் தெளிவாக உள்ளது. இந்த வழக்கில் தேவையான அனைத்து ஆதாரங்களையும் அவர்கள் திரட்டியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் கேட்பதற்காக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற ஒப்புக்கொள்ள முடியாது. மேலும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இந்த வழக்கில் எந்தப் பாகுபாடுமின்றி விசாரணை நடத்தும் பட்சத்தில், அவர்கள் சாதி மதத்தைக் காரணமாக வைத்து வழக்கை மாற்ற முடியாது.

ஜம்மு காஷ்மீர் போலீசாரின் ஜாதி மற்றும் மத அடையாளத்தை வைத்து அவர்களின் விசாரணை மீது சந்தேகம் எழுப்புவது வெட்கப்பட வேண்டிய செயல். அது ஆபத்தானதும் தான். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை விடுப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளை காப்பாற்றவே நினைக்கிறார்கள்.”

என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறாததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சிறுமியின் தந்தை அளித்துள்ள மனுவில் உள்ள கோரிக்கைகள் குறித்து என்ன முடிவெடுக்கப்படும் என்று காத்திருந்து அறிந்துக்கொள்ள வேண்டும்.

×Close
×Close