மதக்கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் மீது வழக்கு

பினராய் விஜயன் நரேந்திர மோடி போல் ஊடகவியலாளர்களை நடத்துகிறார் - எதிர் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கண்டனம்

கேரள காவல்துறையினர், மாத்ருபூமி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் வேணு பாலக்கிருஷ்ணன் மீது, மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிந்துள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மதக்கலவரங்களை தூண்டும் வகையில் விவாதம் நடத்ததாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் டிஒய்எஃப்ஐ தலைவர் மற்றும் சிபிஎம் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் என இருவரும் வேணு மீது புகார்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ பற்றிய விவாதம் ஒன்று ஜூன் 7ம் தேதி மாத்ருபூமி தொலைக்காட்சியில் நடத்தப்பட்டது. அதில் எர்ணாக்குளம், அலுவா பகுதியில் வசித்து வந்த எடடத்தல் உஸ்மான் என்ற இஸ்லாமியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி பேசியுள்ளார் வேணு.

அதில் “புனித ரமலான் மாத நோன்பினை மேற்கொண்டிந்த உஸ்மான் மீது இந்த அரசு கறையை பூசியிருக்கிறது. உணவினை உட்கொள்ள சென்ற இஸ்லாமிய சகோதரனுக்கு ஜெயிலை தண்டனையாக கொடுத்திருக்கிறார், நம் முதல்வர்” என்று பேசியிருக்கிறார்.

”2005ம் ஆண்டு, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நசீர் மதானியை கைது செய்தது தொடர்பாக, தமிழ்நாட்டில் இருந்து வந்த பேருந்து எரிக்கப்பட்டது. அதில் உஸ்மான் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது” என்றும் அவர் அந்நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

கொல்லம் காவல் துறை ஆணையர் அருள் பி. கிருஷ்ணன் இது பற்றி கூறும் போது “அரசு தரப்பு வழக்குரைஞர் ஆலோசனைப் படியே கைது நடவடிக்கையில் ஈடுபட்டோம்” என்று குறிப்பிட்டார். “ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் சம்பந்தப்பட்டதாக இப்பிரச்சனை இருப்பினும் மதக்கலவரங்களை உருவாக்கும் வகையில் பேசியதிற்காக இந்த கைது நடவடிக்கை” என்றும் கூறினார்.

கைது நடவடிக்கையை எதிர்த்து பேசிய எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா “பினராய் விஜயன் நரேந்திர மோடி போல் ஊடகவியலாளர்களை நடத்துகிறார்” என்று கூறியுள்ளார்.

×Close
×Close