சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை : மக்களவையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்!

மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபருக்கு முன்ஜாமீன் கிடைக்காது.

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி,பாலியல் பலாத்கார, செய்ய்ப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.

மேலும் சிறுமிகள் பலாத்கார வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வகையில் நாடு முழுவதும் விரைவு சிறப்பு கோர்ட்டுகளை அமைத்திடவும் இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.

அவசரச்சட்டத்துக்கு மாற்றாக திருத்த மசோதாவை மக்களவையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்தார். நேற்று(30.7.18) இந்த மசோதா மீது 2 மணிநேரம் விவாதம் நடந்தது. இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம்  சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

இந்த மசோதா மீது உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது, “இந்த அளவு கடுமையான சட்டம் கொண்டு வந்திருப்பதன் நோக்கமே 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் பெண்களைப் பலாத்காரம் செய்தால் அதற்கு மட்டுமே தண்டனை விதிக்கும் வழிமுறை இருந்தது.

ஆனால், 16 வயதுக்கு கீழ்பட்ட, அல்லது 12 வயதுக்குள் உள்ள சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள், சட்டவிதிகள் இல்லை. அந்தத் தண்டனை விவரங்கள், கடினமான சட்டங்கள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளன” என்று கூறினார்.

இந்த சட்டத்தின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அல்லது அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கப்படும். மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபருக்கு முன்ஜாமீன் கிடைக்காது. இந்த வழக்கை 2 மாதத்துக்குள் விசாரித்து கோர்ட்டு தண்டனை அளிக்க வேண்டும். மேல்முறையீடு வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு முன்பு இருந்த 10 ஆண்டுகள் சிறை தண்டனை தற்போது 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் அதிகபட்சமாக ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close