முடிவுக்கு வந்தது இழுபறி... மத்தியப் பிரதேசத்தின் முதல்வராகிறார் கமல் நாத்

சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் முதல்வர் பதவியை யார் வகிக்கப் போகின்றார்கள் என்பதில் தொடர் இழுபறியே நீடித்து வருகிறது.

Madhya Pradesh CM Kamal Nath : நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பாஜகவினை வீழ்த்தி வெற்றி பெற்றது காங்கிரஸ். ஆனால் முதல்வர்களாக யாரை நியமிப்பது என்ற பிரச்சனை மற்றும் இழுபறி காங்கிரஸ் கட்சிக்குள் நீடித்து வந்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக கமல்நாத்தினை தேர்வு செய்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

கடந்த 15 வருடங்களாக பாஜகவின் கோட்டையாக திகழ்ந்து வந்தது மத்தியப் பிரதேசம். சிவராஜ் சிங் சௌஹான் இம்மாநில முதல்வராக மூன்று முறை ஆட்சி செய்து வந்தார். 230 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் 116 இடத்தில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்க : இத்தனை நலத்திட்டங்கள் செய்தும் பாஜக தோல்வியை தழுவியது ஏன் ?

பாஜக 109 இடங்களில் வெற்றி அடைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தங்களில் ஆதரவினை காங்கிரஸ்ஸிற்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ம.பி.யில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்.  காங்கிரஸ் மூத்த உறுப்பினரும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கமல் நாத் மற்றும் குவாலியர் ராஜ குடும்பத்தின் வாரிசான ஜோதிராதித்ய சிந்தியா (47 வயது) மத்தியில் யார் முதல்வர் என்ற குழப்பம் நீடித்து வந்தது.

Madhya Pradesh CM Kamal Nath அனுபவம் மற்றும் பதவிகள்

72 வயதான கமல் நாத் காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே பல்வேறு பதவிகள் வகித்து வந்தார். தற்போதைய ம.பி. மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். சிந்த்வாரா தொகுதியின் எம்.பி. ஆக தற்போது செயல்பட்டு வரும் கமல் நாத் ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிராதித்ய சிந்தியா, குணா தொகுதியின் எம்.பியாக செயல்பட்டு வருகிறார். இளம் தலைமுறை மற்றும் குறைவான அனுபவம் காரணமாக இவரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. யாரை முதல்வராக தேர்வு செய்யலாம் என ஏ.கே. அந்தோணி மற்றும் ஜித்தேந்தர் சிங் இருவர் முன்னிலையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் எம்.எல்.ஏக்களின் தேர்வு மற்றும் தங்களின் தனிப்பட்ட தேர்வாக கமல் நாத் இருந்தார்.

மேலும் ம.பி.யின் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் ஆதரவும் கமல்நாத்திற்கு இருந்தது. அனுபவம் மற்றும் ஆதரவுகளின் அடிப்படையில் கமல் நாத்தினை மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக தேர்வு செய்திருக்கிறார் ராகுல் காந்தி. வருகின்ற 17ம் தேதி போபாலில் இருக்குல் லால் பரேட் மைதானத்தில் முதல்வர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கமல் நாத்தை தேர்வு செய்ததை அடுத்து பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களில் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தன்னுடைய வாழ்த்துகளை கூறியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் முதல்வர் பதவியை யார் வகிக்கப் போகின்றார்கள் என்பதில் தொடர் இழுபறியே நீடித்து வருகிறது.

மேலும் படிக்க : மூன்று மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் யார் யார் ?

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close