விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி... காங்., அரசிலாக்க வேண்டாம்: வெங்கையா நாயுடு

மத்தியபிரதேச மாநிலமானது அமைதி சூழ்ந்த தீவு போல திகழ்கிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தை காங்கிரஸ் அரசிலாக்க கூடாது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கான உரிய கொள்முதல் விலை அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 1-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே அம்மாநிலத்தின் மாண்ட்சோர் பகுதியில் நேற்று நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது, இருவேறு பகுதிகளில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, காங்கிரஸ் கட்சி இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: மத்தியபிரதேச மாநிலமானது அமைதி சூழ்ந்த தீவு போல திகழ்கிறது. அங்கு விவசாயிகள் போராட்டம் என்பதை முன்னிறுத்தி காங்கிரஸ் வன்முறையை அதிகரிக்க வேண்டாம். இந்த சம்பவத்தை காங்கிரஸ் அரசியலாக்கக் கூடாது என்று கூறினார்.

முன்னதாக இது தொடர்பாக மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் கூறும்போது, இந்த சம்பவத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவிலை என்று கூறியிருந்தார். அதன்பின்னர் அவர் கூறும்போது, போலீஸார் தங்களது தற்காப்பு நடவடிக்கைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் அறிவித்தார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு வேலை வழங்கப்படும். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதோடு, அவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்தார். மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close