Congress presidential polls | Indian Express Tamil

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: பிரச்சாரத்தைத் தொடங்கிய கார்கே, சசி தரூர் கூறியது என்ன?

என்னைப் பொறுத்தவரை, நான் என்பதற்குப் பதிலாக நாங்கள் என்பது முக்கிய வார்த்தை. நாங்கள் இணைந்து முடிவெடுப்போம், குறைகள் எங்கிருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்- மல்லிகார்ஜுன் கார்கே

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: பிரச்சாரத்தைத் தொடங்கிய கார்கே, சசி தரூர் கூறியது என்ன?
Mallikarjun Kharge

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய ராஜ்யசபா எம்.பி.யும் கட்சியின் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே ஞாயிற்றுக்கிழமை “நான் அனைவருக்குமான வேட்பாளர்” என்று கூறினார், மேலும் அவர் தனது போட்டியாளரும், மக்களவை எம்பியுமான சசி தரூரிடம், பதவிக்கான ஒருமித்த பெயராக ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, “ஜனநாயகப் போட்டிதான் கட்சியை பலப்படுத்தும்” என்று தன்னிடம் கூறியதாக தரூர் கூறியது போல் கார்கேவின் கருத்து சுவாரஸ்யமானது. மற்ற கட்சிகளில் இல்லாத, உள்கட்சி ஜனநாயகத்திற்கு ஒரு உதாரணமாக கட்சியும் போட்டியை வடிவமைத்துள்ளது.

அதே நேரத்தில், தில்லியில் உள்ள அவரது ராஜாஜி மார்க் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்கே, தான் ஸ்தாபன வேட்பாளர் என்ற கருத்து தவறானது என்றார். தரூரை தனது இளைய சகோதரர் என்று அழைத்த கார்கே, யாரையும் எதிர்ப்பதற்காக தேர்தலில் இறங்கவில்லை என்றும், அவரது “சிந்தனைகளை” கட்சிக்குள் கொண்டு வந்து காங்கிரஸ் சித்தாந்தத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் அன்று தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய கார்கே, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் பி.சி.சி பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற, வரும் நாட்களில் சில முக்கிய மாநிலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஷக்திசிங் கோஹில்  ஆகியோர், கார்கே பிரச்சாரத்தைத் தொடங்கும்போது அவரது இல்லத்தில் இருந்தார்கள், ஆனால் அவர்கள் நடுநிலைமையைக் காட்ட அவருடன் மேடையில் இல்லை.

மேடையில் இருந்த கட்சியின் மூன்று தேசிய செய்தித் தொடர்பாளர்கள் – தீபேந்தர் ஹூடா, சையத் நசீர் ஹுசைன் மற்றும் கவுரவ் வல்லப் ஆகியோர் கார்கேவின் பிரச்சாரத்தை ஒருங்கிணைக்க தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததாக செய்தியாளர் சந்திப்பின் தொடக்கத்தில் அறிவித்தனர்.

அப்போது “அதிகாரப்பூர்வமற்ற வேட்பாளர்” என்ற கருத்து பற்றி கேட்டதற்கு, கார்கே கூறுகையில்: எங்கள் தலைவர்கள், மூத்த மற்றும் இளம் தலைவர்கள், மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், காந்தி குடும்பத்தில் வேட்பாளர் இல்லாதபோது, ​​அவர்கள் போட்டியிட விரும்பவில்லை… நீங்கள் போராட வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். அவர்கள் எனக்கு அளித்த தைரியம், அவர்கள் எனக்கு அளித்த ஊக்கத்தால் தான், அவர்களின் விருப்பப்படி நான் போட்டியிடுகிறேன் என்று அவர் கூறினார்.

காந்தி குடும்ப உறுப்பினர், தேர்தலில் இல்லாத நிலையில், பல தலைவர்கள் தொலைபேசி மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் கூட அனைத்து ஒத்துழைப்பையும் அளித்ததாக கார்கே கூறினார். வேட்புமனு தாக்கல் நாளன்று மூத்த தலைவர்கள் அனைவரும் தனக்கு ஆதரவாக வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தனக்காக பிரச்சாரம் செய்பவர்கள் தற்போதைக்கு கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நிச்சயமாக எனக்கு மக்கள், தலைவர்களின் ஆதரவு உண்டு. நான் அனைவருக்குமான வேட்பாளர், அனைவரும் என்னை ஆதரிக்கின்றனர் என்றார்.

தரூரை வாபஸ் பெறச் சொல்வீர்களா என்ற கேள்விக்கு, அது அவரைப் பொறுத்தது. நான் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அவர் தொலைபேசியில் என்னை வாழ்த்தினார். நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். ஆனால் ஒருமித்த வேட்பாளராக ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன். அதற்கு அவர் ஜனநாயகத்தில் போராட்டம் இருக்க வேண்டும், அதனால் தான் போராடுகிறேன் என்று பதிலளித்தார்.

நான் சரி என்றேன். ஒரு வேட்பாளர் போட்டியிடத் தீர்மானித்தால், நான் அவரை எப்படி நிறுத்துவது? அவர் என் இளைய சகோதரர். இது உள் விவகாரம். இன்றும் நாளையும் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கார்கே கூறினார்.

மேலும் ஜி-23 மூத்த தலைவர்கள் அவருக்கு ஆதரவு அளித்ததால், அவர்களின் புகார்கள் தீர்க்கப்பட்டதா என்பது குறித்து அவர் கூறுகையில்; இதை இத்துடன் இணைக்க வேண்டாம். இப்போது ஜி-23 இல்லை. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள்… அவர்கள் கட்சியைக் காப்பாற்ற விரும்புகிறார்கள், ஒற்றுமையாக இருக்க விரும்புகிறார்கள் மற்றும் BJP / RSS க்கு எதிராக ஒற்றுமையாகப் போராட விரும்புகிறார்கள். அதனால் தான் அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்.

கார்கே தற்போதைய நிலைக்கான வேட்பாளர் என்ற தரூரின் கருத்துக்கள் குறித்து கேட்டதற்கு: இது தரூர் கருத்து… அவர் பேசும் தற்போதைய நிலை அல்லது சீர்திருத்தங்கள் 9,300-க்கும் மேற்பட்ட வாக்களிக்கும் பிரதிநிதிகளால் முடிவு செய்யப்படும், அதன் பிறகு காங்கிரஸ் செயற்குழு அமைக்கப்படும்…

கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், அமைக்கப்படும் குழு, கொள்கை வகுக்கும் விஷயங்கள் என அனைத்தும் அனைவரின் ஒப்புதலுடன் செய்து நிறைவேற்றுவோம். இது ஒருவரால் முடியாது. என்னைப் பொறுத்தவரை, நான் என்பதற்குப் பதிலாக நாங்கள் என்பது முக்கிய வார்த்தை. நாங்கள் இணைந்து முடிவெடுப்போம், குறைகள் எங்கிருந்தாலும் நடவடிக்கை எடுப்போம், என்றார்.

காந்தி குடும்பத்தின் பங்கு முன்னோக்கி செல்வது குறித்து கார்கே பேசுகையில், நான் கட்சித் தலைவரானால், அவர்களுடனும், மற்ற மூத்த தலைவர்களுடனும் கலந்தாலோசித்து நல்ல ஆலோசனைகளை செயல்படுத்துவேன் என்றார். நான் நிச்சயமாக அவர்களிடம் ஆலோசிப்பேன்… ஆனால் அதற்காக 50 ஆண்டுகளில் நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம் இல்லை, என்று கூறினார்.

கட்சிக்காக வேலை செய்வது பகுதி நேரமாக அல்ல, முழு நேர வேலையாக இருக்க வேண்டும் என்று கார்கே கூறினார்: நான் முழுநேர வேலை செய்து வருகிறேன். நான் காலையில் பார்லிமென்ட் நுழைந்ததும், மாலையில் தான் எழுந்து வருவேன்… எந்தப் பொறுப்பை ஏற்றாலும், நேர்மையாக உழைப்பது என் வழக்கம் என்று கார்கே கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Mallikarjun kharge congress presidential polls shashi tharoor