மோடி இலங்கை பயணம்: மீனவர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் நிலை குறித்தும், இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்படலாம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை செல்கிறார். அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சந்திக்கிறார்.
அப்போது, தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக, பிரதமர் மோடியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
கொழும்பில் நடைபெறும் சர்வதேச வெசாக் நிகழ்வில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி நாளை வியாழக்கிழமை இலங்கை செல்கிறார். அவருக்கு, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மோடி, வெள்ளிக்கிழமை மலையகத்திற்கு விஜயம் செய்கிறார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு இந்தியா திரும்புகிறார். வெள்ளிக்கிழமை மாலை 03.00 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த சந்திப்பின் போது, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் நிலை குறித்தும், இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

×Close
×Close