மும்பை கட்டட விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

மும்பையில் உள்ள நான்கு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் உள்ள நான்கு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான காட்கோபார் பகுதியில் உள்ள நான்கு மாடிக்கட்டடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டட இடிபாடுகளில் அங்கு வசித்து வந்த சுமார் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். கட்டத்தின் கீழ் தளத்தில் மருத்துவ கிளீனிக் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அது தவிர, அக்கட்டடத்தில் சுமார் 12 குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர், போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களில் சிலரை சடலமாகவும், சிலரை படுகாயங்களுடனும் அவர் மீட்டெடுத்தனர். மீட்புப் படையினர் இருவர் உள்பட படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், சிலரது உயிர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரிந்தது. சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்ட அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு 15 நாட்களில் அறிக்கை தாக்க செய்ய மும்பை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, கீழ்தளத்தில் இயங்கி வந்த மருத்துவ கிளீனிக்கில் மேற்கொள்ளப்பட்டு வந்த புனரமைப்பு பணிகள் காரணமாக கட்டடம் பலவீனம் அடைந்து இந்த விபத்து நடைபெற்றதாக அங்கு வசிப்போர் தெரிவித்துள்ளனர். அந்த கிளீனிக்கின் உரிமையாளரான சிவசேனா கட்சிப் பிரமுகர் சுனில் ஷிதப் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பையில் பருவமழை காலங்களில் இதுபோன்ற கட்டட விபத்துகள் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள், மக்கள் வசித்து வரும் கட்டடங்கள் என பருவமழை காலங்களில் அங்கு பல்வேறு கட்டட விபத்துகள் நடந்துள்ளன.

இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேரும், அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகளும் ஆறு பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் மும்பையின் புறநகர் பகுதியில் ஏற்பட்ட கட்டட விபத்தில், 12 பேரும், அதே மாதத்தில் ஏற்பட்ட மற்றொரு கட்டட விபத்தில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.

×Close
×Close