பிரதமர் மோடியை கேலி செய்து மீம்ஸ், பிரபல சமூக வலைத்தளப் பக்கம் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை கேலி செய்யும் வகையில் சித்தரித்து ‘மீம்ஸ்’ வெளியிட்ட மும்பையை சேர்ந்த பிரபல சமூக வலைத்தள பக்கமான ஏ.ஐ.பி. மீது மும்பை சைபர் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மும்பையில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.பி. வலைத்தள பக்கத்தினர் கடந்த 2016-ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை கேலி செய்து வெளியிட்ட வீடியோ கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டு ரன்வீர் சிங் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகியோரை இழிவாக சித்தரிக்கும் வகையில் ஏ.ஐ.பி. வெளியிட்ட வீடியோ கடும் சர்ச்சைக்கு உள்ளாகியது. அப்போது, காவல் துறையினர் ஏ.ஐ.பி. பக்கத்தினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஏ.ஐ.பி. சமீபத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில் பிரதமர் மோடியை போன்ற தோற்றத்தைக் கொண்ட ஒருவர் ரயில் நிலையத்தில் கையில் செல்ஃபோனை பார்த்துக்கொண்டு, ரயிலுக்காக காத்திருப்பதுபோல் உள்ளது. அதன்கீழே பயணவிரும்பி என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை கேலி செய்வதுபோல் உள்ளது என பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, இந்த புகைப்படம் பிரதமர் மோடியை இழிவுபடுத்துவது போல் உள்ளது என கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஏ.ஐ.பி. பக்கத்தினர் அந்த புகைப்படத்தை வியாழக் கிழமை நீக்கினர். எனினும் மும்பை சைபர் போலீசார் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இந்திய தண்டனை பிரிவு 500 (அவதூறு), பிரிவு 67 ஐ.டி. சட்டம் (மின்னணு ஊடகங்கள் வாயிலாக இழிவான கருத்துகளை பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏ.ஐ.பி. பக்கத்தின் முதன்மையானவர்களில் ஒருவரான தன்மயி பட் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

“நாங்கள் மறுபடியும் கேலி செய்வோம். தேவைப்பட்டால் அதனை நீக்குவோம். தேவைப்பட்டால் மன்னிப்பு கேட்போம். நீங்கள் என்ன நினைத்தாலும் அங்களுக்கு அது பெரிதல்ல”, என தன்மயி பட் ட்விட்டரில் பதிவிட்டார்.

×Close
×Close