மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தீர்ப்பை மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை

பட்டம் பறக்கவிட பயன்படுத்தும் மாஞ்சா நுலை பயன்படுத்த நாடு முழுவதும் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் மாஞ்சா நூலை உற்பத்தி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. பட்டங்களை பறக்கவிடுவதற்காக, ஆபத்தான மாஞ்சா நூலை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனிநபர்கள் மற்றும் ‘பீட்டா’ விலங்குகள் நல அமைப்புகள் உள்ளிட்டவைகள் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழங்கு தொடர்ந்திருந்தன.

அதில், ‘‘பட்டங்களை பறக்க விடுவதற்கு மாஞ்சா நுலை பயன்படுத்துவது ஆபத்தானது. இந்த மாஞ்சா நூலினால் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள், விலங்கினங்கள் மற்றும் பறவைகள் என உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதில் கண்ணாடி துகள்கள், உலேகத் தகடுகள், ரசாயனக் கலவைகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளதால், இதனை தடை செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.

அதில், நமது நாட்டில் பட்டம் பறக்கவிடுவது பாரம்பரியமாக விஷயமாக உள்ளது. ஆனால், பட்டம் பறக்கவிடுவதற்காக மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுவதால், மனிதர்கள் மற்றும் பறவைகள், விலங்குகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்பட்டு, உயிர்பலி ஏற்படுவதும் அதிகரித்து வருகின்றன. எனவே, சுற்றுசூழலை கருத்தில் கொண்டு பசுமை தீர்ப்பாயம் இதில் தலையிடுவது அவசியமாகிறது.

எனவே, நைலானில் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் மற்றும் இதர செயற்கை பொருட்களில் மாஞ்சா நூல், கண்ணாடித்தூள் சேர்த்து தயாரிக்கப்படும் பருத்தி நூல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது போன்ற ஆபத்தான மாஞ்சா நூல்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, இருப்பு வைத்திருக்கவோ தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த, மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை மீறி செயல்படுபவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close