‘நீச் ஆத்மி’ என மோடி மீது விமர்சனம் : காங்கிரஸில் இருந்து மணிசங்கர் ஐயர் சஸ்பென்ட்

பிரதமர் நரேந்திர மோடியை, ‘நீச் ஆத்மி’ என விமர்சனம் செய்த மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயரை கட்சியை விட்டு சஸ்பென்ட் செய்தார் ராகுல் காந்தி.

பிரதமர் நரேந்திர மோடியை, ‘நீச் ஆத்மி’ என விமர்சனம் செய்த மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயரை கட்சியை விட்டு சஸ்பென்ட் செய்தார் ராகுல் காந்தி.

குஜராத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருக்கத்தில் உச்சகட்ட பிரசாரம் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் இறுதிகட்ட பிரசாரத்தில் அனல் பறந்தது. குஜராத்தில் அம்பேத்கர் மையம் ஒன்றை திறந்து வைத்த பிரதமர் மோடி, ‘தேசத்தின் கட்டமைப்புக்கு அம்பேத்கர் செய்த பணிகளை காங்கிரஸ் அகற்றிவிட்டது’ என்றார்.

காங்கிரஸ் சார்பில் இன்று பிரசாரம் செய்த மணிசங்கர் ஐயர், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரதமர் மோடி தரம் தாழ்ந்த மனநிலையில் பேசுவதாக குறிப்பிட்டார். மேலும் மோடியை குறிப்பிடுகையில், ‘நீச் ஆத்மி’ என கூறினார். இந்தியில், ‘நீச் ஆத்மி’ என்கிற வார்த்தைக்கு ‘வெறுக்கத்தக்க நாயகன்’ என தமிழில் பொருள் கொள்ளலாம். பிறப்பு அடிப்படையில் ஒருவரை தரம் தாழ்த்தி பேசுவதற்கும், ‘நீச்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தும் நடைமுறை இருக்கிறது.

மணி சங்கர் ஐயரின் இந்த வார்த்தை பிரயோகத்தை, அவரது பெயரைக் குறிப்பிடாமல் மோடியே கண்டித்தார். சூரத்தில் நடந்த பேரணியில் பேசிய மோடி, ‘காங்கிரஸ் தலைவர்கள் ஜனநாயகத்தில் ஏற்க முடியாத வார்த்தைகளில் பேசுகிறார்கள். சிறந்த கல்வி நிறுவனங்களில் பயின்ற, கேபினட்டில் பதவி வகித்த ஒருவர், ‘மோடி இச் அ நீச்’ என குறிப்பிட்டிருக்கிறார். இது அவமரியாதையானது. இது வேறொன்றுமில்லை, மொகலாய மனநிலை’ என்றார் மோடி.

தொடர்ந்து பேசிய மோடி, ‘அவர்கள் நம்மை கழுதைகள், தரம் தாழ்ந்தவர்கள் என அழைக்கிறார்கள். அவர்களின் மனநிலைக்கு டிசம்பர் 9, 14-ம் தேதிகளில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குகள் மூலமாக பதில் கொடுப்போம்’ என்றார் மோடி.

மோடியின் இந்த உருக்கப் பிரசாரத்திற்கு, அதே ‘சென்டிமென்ட்’ அஸ்திரத்தை ராகுல்காந்தி பதிலாக ஏவியதுதான் க்ளைமாக்ஸ்! ‘மணிசங்கர் ஐயரின் தனிநபர் தாக்குதலை நான் விரும்பவில்லை. இது காங்கிரஸின் கலாச்சாரம் அல்ல. மணிசங்கர் உடனே வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என ட்விட்டரில் பதிவிட்டார் ராகுல்.

மணிசங்கரும், ‘நான் பிறப்பை அடிப்படையாக வைத்து ‘நீச்’ என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இந்தி எனது தாய்மொழி இல்லை என்பதால், சரியான அர்த்தம் எனக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். பிரதமரின் மலிவான பிரசாரத்திற்கு பதில் கொடுக்கும் விதமாகவே நான் பேசினேன்’ என்றார் ஐயர்.

ஐயர் வருத்தம் தெரிவித்த பிறகும், அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சர்ஜிவாலா இதை அதிகாரபூர்வமாக தெரிவித்தார். மணிசங்கர் ஐயருக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் சார்பில் நோட்டீஸும் அனுப்பப் பட்டது.

தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸின் இந்த அதிரடி, குஜராத்தில் காங்கிரஸ் மீதான மரியாதையை அதிகப்படுத்தலாம் என தெரிகிறது.

 

×Close
×Close