மே 6-ஆம் தேதி நீட் தேர்வு: விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம்

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு மே 6-ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு மே 6-ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் மற்றும் திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசியளவிலான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு கடந்தாண்டு முதல் நடத்தப்படுகிறது. இரண்டாம் ஆண்டாக நடைபெறவிருக்கும் இத்தேர்வுக்கான அறிவிக்கை சிபிஎஸ்இ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இயற்பியல், வேதியியல், உயிரியியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியல், ஆங்கிலம் ஆகியவற்றை ஒரு பாடமாக எடுத்து 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் 40% தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. நடப்பாண்டில் பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பித்தவர்களும் நீட் தேர்வெழுத தகுதியுடையவர்கள் ஆவர்.

தனித்தேர்வர்கள் மற்றும் திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்கள் நீட் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கான குறிப்பாணை வெளியானதும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால், இந்த இணையத்தளம் முடங்கியது. இதனால், மாணவர்கள் பதற்றமின்றி பொறுமையாக விண்ணப்பிக்குமாறு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

மார்ச் 9-ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பத்திற்கான கட்டணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த மார்ச் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.

கடைசி நேரத்திலும் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்பதால், கடைசி நேர பதற்றத்தையும் தவிர்க்குமாறு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 15% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close