வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கவும் ’நீட்' தேர்வு கட்டாயம்: பெற்றோர்கள் அதிர்ச்சி!

வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற சட்டம் விரைவில் வரவுள்ளது.

இந்தியா அல்லாமல் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற சட்டம் விரைவில் வரவுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க விரும்பும் ஒவ்வொரு மாணவர்களும் ’நீட்’ நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த நீட் தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்கள் மட்டுமே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்ந்து படிக்க முடியும் என்றும் கட்டாயமாக்கப்பட்டது.

நீட் தேர்வினால் அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப்படிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல், தமிழக அரசும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகிறது. இருப்பினும், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ படிப்பு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மருத்துவப்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவும், நீட் தேர்வை எதிர்க்கொள்ள பயந்த மாணவர்கள் அதிகமானோர், சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் போன்ற வெளிநாடுகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க அதிகளவில் ஆர்வம் காட்டினர். வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடிக்கும் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவர்களாக பணிப்புரிய இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும், (Foreign Medical Graduates Examination – FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது.

ஆனால், வெளிநாடுகளில் மருத்துவம் படித்து திரும்பும் மாணவர்களில் 12-15 சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவில் நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், தகுதித்தேர்வில் கடினமான கேள்விகள் கேட்கப்படுவதாக, வெளிநாடுகளில் கற்றுத் தரப்படும் கல்வி முறையுடன் இந்த கேள்விகள் ஒத்துப்போவதில்லை என்ற குற்றச்சாட்டு பெருமளவில் இருந்து வருகிறது. இந்நிலையில், மருத்துவ படிப்பில் இந்திய மருத்துவ கவுன்சில் அடுத்த அதிரடியான திட்டத்தைக் கொண்டு வரவுள்ளது. இதன்படி, இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களும் நீட் தேர்வை எதிர்க்கொள்ள வேண்டும் என்ற புதிய நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே, வெளிநாடுகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இருக்கும் FMGE தகுத்தேர்வு கடினமாக இருக்கும் நிலையில், இதனுடன் நீட் தேர்வும் இணைவது, மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும் என்று பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.

×Close
×Close