சூட்கேசில் பிணத்துடன் சிக்கிய நீட் தேர்ச்சிப் பெற்ற மாணவர்

நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த 20 வயது மாணவனையும் அவனுடைய நண்பனையும் போலீசார் கைது செய்தனர். ஒரு சூட்கேஸில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞனின் சடலத்தினை, எடுத்துச் சென்ற போது இருவரும் கைது செய்யப்பட்டனர். 

விஷால் தியாகி மற்றும் அவனுடைய நண்பன் பௌருஷ் குமாரும் சேர்ந்து விஷாலின் உறவினரான தீபன்ஷுவினை கொலை செய்திருக்கின்றார்கள். இம்மூவரும் கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் பிரிஸ்டைன் அவென்யூ பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். கடந்த ஞாயிறு அன்று மூவரும் குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட அது சண்டையில் முடிந்துவிட்டது. தீபன்ஷு முதலில் இருவரையும் தாக்க, பதிலுக்கு அவ்விருவரும் தீபன்ஷுவை அடித்திருக்கின்றார்கள். அதில் தீபன்ஷு இறந்துவிட்டார்.

இறந்து போன தீபன்ஷுவின் உடலினை இரண்டாக அறுத்து அதனை சூட்கேசில் அடைத்து வைத்து அப்புறப்படுத்த முயன்றிருக்கின்றார்கள்.  அந்த சூட்கேசினை யமுனை நதியில் எறிந்துவிடலாம் என்று யோசித்து இ-ரிக்‌ஷாவில் பயணித்திருக்கின்றார்கள். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த சூட்கேசில் படிந்திருந்த இரத்தக்கறையினை பார்த்துவிட்டு விசாரிக்கத் தொடங்கினார்கள்.

காவல்துறை விசாரணையில், கிரேட்டர் நொய்டாவில் இருந்து பிருந்தாவன் வரை செல்ல ஒரு காரினை புக் செய்திருக்கின்றார்கள். அங்கிருந்து யமுனைக்கு செல்ல இ-ரிக்‌ஷாவில் பயணித்திருக்கின்றார்கள் என்று தெரிய வந்திருக்கின்றது. இக்கொலையின் முக்கிய குற்றவாளியான விஷால் இந்த வருடம் தான் நீட் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சியும் அடைந்திருக்கின்றார்.  விஷாலின் தந்தை காசியாபாத் பகுதியில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். அவரின் குடும்பம், காசியாபாத்தின் சஞ்சய் நகரில், செக்டர் 23ல் வசித்துவருகின்றது என்ற தகவலை அளித்திருக்கின்றார் பிருந்தாவன் பகுதியில் இருக்கும் கோட்வாளி காவல் நிலைய அதிகாரி சுபோத் குமார்.

இக்கொலையில் மூன்றாவது குற்றவாளியாக குட்டு என்பவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கின்றான் விஷால். இம்மூவர் மீதும் ஐபிசி 302, மற்றும் 201ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது,

கொலை செய்யப்பட்ட தீபன்ஷுவும் காசியாபாத்தில் வளர்ந்தவர் தான். தன்னுடைய உறவினரான விஷால் மற்றும் அவனுடைய நண்பனான பௌருஷ் ஆகியோருடன் கடந்த ஐந்து மாதங்களாக கிரேட்டர் நொய்டாவில் தங்கி வந்திருக்கின்றார்.

சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை தீபன் தன்னுடைய அம்மா ராஜ் குமாரி தியாகிக்கு போன் செய்து அழுதிருக்கின்றார். மகனைப் பார்ப்பதற்காக செவ்வாய் கிழமை கிரேட்டர் நொய்டா செல்ல ராஜ் குமாரி முடிவெடுத்திருந்தார்.

ராஜ் குமாரி “விஷால் இப்படி ஒரு காட்டுமிராண்டித் தனமான காரியத்தை செய்திருக்கின்றான் என்பதை நம்பவே இயலவில்லை, இக்கொலைக்கு தண்டனையாக விஷால் தூக்கிலிடப்பட வேண்டும்” என்று கூறியிருக்கின்றார். பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய கணவனை இழந்த ராஜ் குமாரி தனியாளாக இருந்து குடும்பத்தை கவனித்து வந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close