இந்தியா முழுவதும் இன்று மதியம் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

மருத்துவ படிப்பின் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் இந்தியா முழுவதும் இன்று வெளியாகிறது. இன்று மதியம் 2 மணிக்கு இந்தியா முழுவதும் வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேக்கைக்கு கடந்த மே 6ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு 2018 -19ம் ஆண்டின் மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 136 நகரங்களில் அமைக்கப்பட்ட 2,255 தேர்வு மையங்களில் சுமார் 13 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களில் ஒரு பகுதியினருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கேரள மாநிலத்தில் மையங்கள் ஒதுக்கப்பட்டது. ஒரு சில மாணவர்களுக்கு ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது. இதனால், பல சிரமங்களுக்கு மத்தியில் மாணவர்கள் வெளிமாநிலங்களில் தேர்வு எழுதினர். இவர்களுக்கு உதவியாகத் தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வந்தது. இதற்குக் குறிப்பிட்ட மாவட்டங்களில் இருந்த தமிழ் ஆர்வலர்களும் உதவினர்.

கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு மட்டும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு சித்தா, யுனானி உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு எழுத வேண்டியிருந்ததால் அதிக அளவிலான மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றே வெளியிடப்படுகிறது. இன்று மதியம் 2 மணிக்கும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் அனில் ஸ்வரூப் அறிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

×Close
×Close