விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை: பிரான்சின் ரகசிய ஆவணத்தில் தகவல்!

இந்நிலையில், பாரீஸை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மோர், பிரான்ஸ் நாட்டின் ரகசிய சேவை அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1945-ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் இறக்கவில்லை. 1947-ஆம் ஆண்டு இறுதி வரை அவர் உயிருடன் இருந்திருக்கிறார் என்ற பிரான்ஸ் நாட்டின் ரகசிய ஆவணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் இதுவரை மர்மமாகவே இருந்துவருகிறது. அவரது மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகளை அவிழ்க்க மத்திய அரசு 3 விசாரணை கமிஷன்களை அமைத்தது. 1956-ல் அமைக்கப்பட்ட ஷா நவாஸ் கமிட்டியும், 1970-ல் அமைக்கப்பட்ட கோஸ்லா கமிட்டியும் தாக்கல் செய்த அறிக்கையில் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஜப்பான் கட்டுப்பாட்டில் இருந்த தைபேவின் (தற்போதைய தைவான் நாட்டின் தலைநகர்) தைகோகு விமான விபத்தில் நேதாஜி மரணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், 1999-ஆம் ஆண்டு முகர்ஜி கமிஷன் மட்டும், விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என கூறியது. இதனை மத்திய அரசு மறுத்தாலும், நேதாஜி மரணத்தில் மறைந்துள்ள மர்மங்களை கண்டறிய வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பாரீஸை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மோர், பிரான்ஸ் நாட்டின் ரகசிய சேவை அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார். 1947-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதியிடப்பட்ட அந்த அறிக்கை, பிரான்சின் ஆவண காப்பகத்தில் இருந்து மோருக்கு கிடைத்திருக்கிறது.

அதில், தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. அவர் இறந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இந்த விபத்தில் இருந்து அவர் தப்பிவிட்டார். இதுவரை அவர் உயிருடனே உள்ளார். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை கண்டறிய முடியவில்லை என கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், 1947-ஆம் ஆண்டு டிசம்பர் வரை சுதந்திரத்திற்கு பிறகும் நேதாஜி உயிருடனே இருந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது என ஆய்வாளர் மோர் கூறி உள்ளார்.

×Close
×Close