இங்கிலாந்தில் வேகமாகப் பரவும் புதுவகை கொரோனா வைரஸ் குறித்து அரசாங்கம் எச்சரிக்கையாக இருப்பதாகவும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, இங்கிலாந்தில் வரும் விமானப் பயணிகளுக்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் தடை விதித்துள்ளன.
முன்னதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வைரஸில் பெரிய பிறழ்வு இங்கிலாந்தில் அதிகளவு நோய்த் தொற்று பரப்பி வரும் காரணத்தினால் அனைத்து விமானங்களையும் உடனடியாக தடை செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டார். .
வைரஸின் புதிய வடிவம் மற்றும் எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க சுகாதார அமைச்சின் உயர் ஆலோசனைக் குழு இன்று கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எய்ம்ஸ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வல்லுநர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதிநிதியும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவிட்-19 நோய்க்கு காரணமாகும் நாவல் கொரோனா வைரஸில் புதிய வடிவம் பிரிட்டனில் புதிதாக ஏராளமான தொற்றுக்குக் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை திட்டத்துடன் தயாராக இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். “இங்கிலாந்தில் வெளிவரும் நாவல் கொரோனா வைரஸின் புதிய வடிவம் மிகுந்த கவலையைத் தருகிறது. இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுவகை கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து அனைத்து விமானங்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் ”என்று அசோக் கெலாட் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
புதுவகை கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் உள்ள பிறழ்வு கோட்பாட்டளவில் நோய்த் தொற்று பரவலை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
பிரிட்டனைச் சுற்றியுள்ள கோவிட் -19 நோயாளிகளின் மரபணு வரிசைமுறையை ஆய்வு செய்து வரும் கோவிட் -19 ஜெனோமிக்ஸ் யுகே (சிஓஜி-யுகே) கூட்டமைப்பு, வைரஸில் ஒரு புதிய தொகுப்பு பிறழ்வுகளை அடையாளம் கண்டது. இதற்கு, வி.யு.ஐ -202012 / 0 எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது வரை புதுவகை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் செயல்திறனை பாதிக்கும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் கூட்டமைப்பு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
இந்த புதுவகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தின் 60 உள்ளூர் பகுதிகளில் சுமார் 1,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்தார். .
இதற்கிடையே, புது வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரை இத்தாலி நாடு பதிவு செய்தது. பாதிக்கப்பட்ட நோயாளியும், அவரது கூட்டாளியும் சில தினங்களுக்கு முன் இங்கிலாந்திலிருந்து இத்தாலி நாட்டுக்குத் திரும்பியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதிலும் முதல் கட்டமாக கோவிட் தடுப்பூசி போடப்பட உள்ள 30 கோடி பேரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. முன்களப் பணியில் ஈடுபட்டள்ள உள்ள காவல்துறை, ராணுவம் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி போடப்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரங்களும் இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.